உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு

'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு

ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் தயாராகும் பான் இந்தியா படம் 'தி பாரடைஸ்'. இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், படமாக்கப்பட்ட சில காட்சிகள் நானிக்கு திருப்திகரமாக அமையவில்லை எனவும், இதனால் மீண்டும் அந்த காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக, 'தி பாரடைஸ்' படம் குறித்து பல ஆதாரமற்ற வதந்திகளும், யூகங்களும் பரப்பப்படுவதை கவனிக்கிறோம். இதனை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். 'தி பாரடைஸ்' படம் முதல் நாளிலிருந்தே முழுமையான தெளிவுடன் திட்டமிடப்பட்டது. தற்போது அதன் பணிகள் திட்டமிட்டபடியே மிகச் சரியாக நடைபெற்று வருகின்றன. 100 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்புப் பணிகள் ஏற்கெனவே வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன.

மீதமுள்ள படப்பிடிப்பும் எவ்வித தாமதமுமின்றி, திட்டமிட்டபடியே நடைபெற்று வருகிறது. இன்றுவரை, இப்படத்தில் ஒரு காட்சி கூட மறுபடப்பிடிப்பு செய்யப்படவில்லை. எதிர்காலத்திலும்தி பாரடைஸ் படத்திற்காக எந்தவொரு மறுபடப்பிடிப்பும் திட்டமிடப்படவில்லை. இப்படத்தின் ஒவ்வொரு கட்டப் பணியும், முதலில் உருவாக்கப்பட்டபோது எத்தகைய பிரம்மாண்டத்துடனும், துல்லியத்துடனும், உறுதியுடனும் கற்பனை செய்யப்பட்டதோ, அதே தரத்துடனும், தீவிரத்துடனும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எங்களுடைய தரப்பில் இருந்து வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில், இப்படம் குறித்துப் பரப்பப்படும் எந்தவொரு தவறான தகவலுக்கும் நாங்களே நேரடியாகப் பதிலளிப்போம். 'தி பாரடைஸ்' திட்டமிட்ட பாதையில் மிகச் சிறப்பாகப் பயணித்து வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !