உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டர் சங்கத்திற்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் பதிலடி

தியேட்டர் சங்கத்திற்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் பதிலடி

தெலுங்குத் திரையுலகத்தில் தியேட்டர்காரர்களுக்கும், தயாரிப்பாளர்களும் இடையே தற்போது புதிய மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் சதவீத பங்கு அடிப்படையில் மட்டுமே படங்களைத் திரையிடுவோம் என தியேட்டர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற அவர்களது கூட்டத்தில் இதை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும், அரசு அனுமதித்தாலும் தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வை தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

இதனிடையே, தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 25 தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினர். அதற்குப் பின் பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இப்போது படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 25 தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களை 50 சதவீதத்திற்கும் மேல் முடித்துவீட்டனர். இவற்றில் பெரிய மற்றும் சிறிய படங்களும் அடங்கும். இந்தப் படங்களுக்கு மொத்த பட்ஜெட்டில் 70, 80 சதவீதம் வரை செலவழித்துவிட்டோம்.

இந்த சமயத்தில் புதிய முறையை அறிமுகப்படுத்துவது சரியல்ல. ஏற்கெனவே தயாரிப்பில் உள்ள படங்களுக்கு இந்த முறையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்கால படங்களுக்கு சதவீத முறையைப் பற்றி விவாதிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சில நிபந்தனைகளைப் பற்றி அதற்கு முன் விவாதிக்க வேண்டும்.

தியேட்டர் தர நிர்ணயம், பராமரிப்பு கட்டணங்கள், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி கட்டணங்கள் ஆகியவற்றைப் பற்றி நாங்கள் விவாதிக்க வேண்டும். அதன் பிறகு புதிய படங்களுக்கு சதவீத முறையுடன் செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

ஒரு பெரிய திரையரங்க உரிமையாளருக்கு சுமார் 300 மல்டிபிளக்ஸ் திரைகள் உள்ளன. பல ஒற்றைத் தியேட்டர்களின் வருவாயை பாதிக்கும் அந்த நபர், ஒற்றைத் தியேட்டர்கள் பற்றிப் பேசியது வேடிக்கையாக இருந்தது.

பிற மாநிலங்களில் சதவீத முறை இருப்பது பற்றி கூறுகிறார்கள், ஆனால், அந்த மாநிலங்களின் நிலையும் சரியாக இல்லை. அவற்றுடன் ஒப்பிடும் போது நாம் நன்றாகவே இருக்கிறோம்.

வினியோகஸ்தரை அழித்துவிட்டு, திரையரங்க உரிமையாளரை மட்டும் காப்பாற்றுவது சரியானதா ?. ஒற்றைத் தியேட்டர்களில் சிறந்த வசதிகள் வழங்கப்பட்டால் மக்கள் அதிக அளவில் அந்தத் தியேட்டர்களுக்கு வருவார்கள்,” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !