‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி
புதுடில்லி : காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது'' எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பழைய படங்களின் பாடல்களை புதிதாக உருவாகும் படங்களுக்கு பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிலர் முறையாக அவரிடம் அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துகின்றனர். சிலர் சம்பந்தப்பட்ட உரிமையை வைத்துள்ள ஆடியோ நிறுவனங்களில் அனுமதி பெற்று பயன்படுத்துகின்றனர். இதனால் சமயங்களில் காப்பிரைட் தொடர்பான பிரச்னை உருவாகிறது. தனது அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்துவதாக பல படங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான ‛அகத்தியா' என்ற படத்தில், இளையராஜா இசையில் வெளியான ‛மூடு பனி' படத்தில் இடம்பெற்ற ‛என் இனிய பொன் நிலாவே' பாடலை ரீ-மிக்ஸ் செய்து இருந்தார் இளையராஜாவின் மகனும், இப்பட இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கான உரிமை தங்களிடம் இருப்பதாக கூறி சரிகம நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் இந்த பாடலுக்கான உரிமையை நாங்கள் பெற்றுள்ளனர். தங்கள் அனுமதியின்றி இந்த பாடலை அகத்தியா படத்தில் பயன்படுத்தி உள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இதுதொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் இளையராஜா. இந்த வழக்கு இன்று (மே 21) நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ‛‛காப்பிரைட் சட்டப்படி ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது. இசை படைப்பில் பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவுகள் அடங்காது'' என கூறிய நீதிபதிகள், இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.