பிளாஷ்பேக் : எங்கே மோகனா?
சில நடிகைகள் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே திடீரென்று நடிப்பை விட்டு விலகி விடுவார்கள், அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிப்பதில்லை. சிலர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள். புகுந்த இடத்தில் நடிக்க கூடாது என்று தடை போடுவதோடு நீ சினிமா நடிகை என்பது கூட தெரியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் அந்த காலத்தில் விதித்து விடுவார்கள். இதன் காரணமாக பல நடிகைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்க பெறுவதில்லை. அப்படியானவர்களில் ஒருவர் மோகனா.
1957ம் ஆண்டு வெளிவந்த “ஆரவல்லி” என்ற படத்தில் ஆரவல்லியாக நடித்தவர் ஜி.வரலட்சுமி. சூரவல்லியாக நடித்தவர் மோகனா. ஜி.வரலட்சுமி பிற்காலத்தில் பெரிய நடிகையானார். ஆனால் மோகனா சில ஆண்டுகள் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். 1957ம் ஆண்டு வெளிவந்த “புதுமைப்பித்தன்”, “மாயா பஜார்” மற்றும் நாடோடி மன்னன் படத்திலும் நடித்துள்ளார் மோகனா. ‛ஷியாமளா, மாயா பஜார், காத்தவராயன், குமுதம் ஆயிரம் ரூபாய், மாடி வீட்டு மாப்பிள்ள, சுமங்கலி, ஹரிச்சந்திரா, சாரங்கதரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கற்புக்கரசி, மாங்கல்யம், எங்கள் செல்வி' போன்றவை இவர் நடித்த மிக முக்கிய படங்கள்.
பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். 20 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில படங்களில் நாயகியாக நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.