உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ' என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். ஊர்வசியுடன் மீண்டும் இணைந்து நடித்திருப்பது குறித்து ஜெயராம் கூறியிருப்பதாவது :

ஊர்வசியோடு 1988லிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குநர் பாண்டிராஜ் இந்த 'பரிமளா அண்ட் கோ' ஸ்கிரிப்டைச் சொன்னபோது, நான் நடுவில் நிறுத்தி, 'இந்த கேரக்டரில் ஊர்வசி நடித்தால் நன்றாக இருக்கும்' என்று மனதில் தோன்றியதை உடனே அவரிடம் சொல்லிவிட்டேன். அவரோ, முன்னரே ஊர்வசியிடம் கதை சொல்லிவிட்டதாகச் சொல்ல, எனக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் தாங்க முடியவில்லை.

நாங்கள் இரண்டு பேரும் 26 படங்களுக்கு மேல் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறோம். ஊர்வசி நான்கைந்து ஸ்டேட் அவார்டுகள் வாங்கினார். அவை அனைத்துமே நாங்கள் இணைந்து நடித்த படங்கள்தான். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். எல்லோரும், எங்கள் காமெடியைப் பற்றி நிறைய பேசுவார்கள். சொல்லப்போனால், அழுவதுபோலக்கூட நடித்துவிடலாம். மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் வகையில் காமெடி செய்வதுதான் கஷ்டம். அதற்கு பர்பார்ம் பண்ணியே ஆக வேண்டும்.

கதையோடுகூடிய காமெடி, பல படங்களில் எங்கள் காம்போவுக்கு வெற்றியைத் தந்தது. சீரியஸ் படங்களிலும் வெற்றி கிடைத்தது. அவரது திரை அனுபவம் பெரிது. தன்னுடன் நடிக்கும் இளையவர்களையும், நடிப்பில் மிளிரச் செய்துவிடுவார். மலையாளத்தில் அவருடன் நடிக்கும்போது, நாங்கள் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். அவருடன் நடிக்கும் போது ஒரு சிறிய பயத்துடனே நடிக்க வேண்டியது இருக்கும். நம்மை கண நேரத்தில் நடிப்பில் வீழ்த்திவிட்டு, மக்களிடம் பெரிய கைத்தட்டலை வாங்கிவிடுவார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !