உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' போலவே 'டாக்சிக்' வெளியீட்டிலும் நீடிக்கும் சஸ்பென்ஸ்

'ஜனநாயகன்' போலவே 'டாக்சிக்' வெளியீட்டிலும் நீடிக்கும் சஸ்பென்ஸ்

கன்னடத் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனம் ஒரே சமயத்தில் தமிழில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தையும், கன்னடத்தில் யஷ் நடித்த 'டாக்சிக்' படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்கள் மூலமும் சுமார் 1300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக இதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்பது பற்றிய சஸ்பென்ஸ் இன்னும் நீடித்து வருகிறது.

அது போலவே 'டாக்சிக்' படமும் எப்போது வெளியாகும் என்ற சஸ்பென்ஸும் நீடிக்கிறது. இப்படத்தை கடந்த வருடம் 2025 ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியிடப் போவதாக 2023ம் ஆண்டிலேயே அறிவித்தார்கள். ஆனால், அதன்படி படத்தை முடிக்க முடியவில்லை.

பின்னர் இந்த வருடம் மார்ச் 19 வெளியாகும் என்று அறிவித்தார்கள். அத்தேதியிலும் படத்தை வெளியிடாமல் ஜூன் 4 வெளியாகும் என்று மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அத்தேதியிலும் படம் வெளியாகவில்லை. உலக அளவில் ஆங்கிலத்திலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டதால், அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக தள்ளி வைத்துள்ளதாகச் சொன்னார்கள்.

இப்போது அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. எனவே, இதற்கு மேல் ஏதாவது ஒரு அறிவிப்பு வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

இரண்டே இரண்டு படங்களில் 1300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிறுவனம் இவ்வளவு தள்ளிப் போவதால் ஏற்படும் நிதி சிக்கலை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை இந்தியத் திரையுலகத்தில் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !