பிளாஷ்பேக் : இலங்கை வானொலியில் அதிகமுறை ஒலிபரப்பான முதல் திரைப்பட பாடல்
1960களில் கன்னட சினிமாவில் மூன்று 'குமார்கள்' முன்னணியில் இருந்தனர். அவர்கள், கல்யாண் குமார், உதயகுமார், ராஜ்குமார். இதில் உதயகுமார், செங்கோட்டை சிங்கம், யானைப்பாகன் உட்பட சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த முக்கியமான தமிழ்ப் படம், 'இவன் அவனேதான்'. அந்த காலகட்டத்தில் தெலுங்குப் படங்களை இயக்கி வந்த பி.ஸ்ரீதர், இந்தப் படத்தை இயக்கினார். டி.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டிஜி ராஜ் தயாரித்தார்.
எம்.ரங்கா ராவ் இசை அமைத்தார். படத்தில் இடம்பெற்ற 9 பாடல்களும் ஹிட்டானது. பிற்காலத்தில் இலங்கை வானொலியில் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் மலர்களே மலரட்டும்' பாடல் இலங்கை வானொலியில் தினசரி ஒலிபரப்பானது போன்று, இப்படத்தில் இடம்பெற்ற 'இன்ப எல்லை காணும் நேரம்' பாடல் அப்போது இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பானது. அதிகமுறை ஒலிபரப்பான முதல் பாடல் என்ற புகழையும் பெற்றது. இந்த பாடலை பி.பி.ஸ்ரீனிவாசும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தார்கள். இதன் படத்தின் பிரின்ட் இப்போது இல்லை. பாட்டு புத்தகங்களிலும், கட்டுரைகளிலுமே இந்த படம் வாழ்கிறது.