தொடர் வெற்றிகளால் சினிமா போதையாக மாறியது: சமந்தா
சமந்தா நடித்துள்ள 'மா இண்டி பங்காரம்' படம் வருகிற 19ம் தேதி வெளியாகிறது. தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இதன் தொடர்ச்சியாக நடந்து வரும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததும், ரசிகர்கள் திரையில் என் பெயரைப் பார்த்து கத்துவதும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சிதான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது. ஒருகட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிப்போனது. ஒரு வருடத்தில் அடுத்தடுத்து நடித்த 5 படங்களும் ஹிட்டானதால், என்னை 'அதிர்ஷ்டக்காரி' எனப் பாராட்டினர். அதனால் ஏற்பட்ட திமிரால் என் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல், வெறும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன். எனது திரை ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன்.
உடல்நலக் குறைவால் படுக்கையில் விழ நேரிட்டது. ஆனால், அந்த இடைவெளியில் இருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகும் ஆண்டிற்கு 5 முதல் 6 படங்கள் எனத் தொடர்ந்து ஓடிக்கொண்டேதான் இருந்தேன். அப்போது வசூலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். நான் திரைத்துறையில் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த இரண்டாவது இடைவெளி (நாகசைன்யா பிரிவு) வந்தது.
நடிகர்களாக இருக்கும்போது நமக்கு ஓய்வே கிடையாது என்ற ஒரு அகம்பாவம் வந்துவிடுகிறது. ஆனால், இந்த இடைவெளி என் எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றியது. மீண்டும் சினிமாவுக்குத் திரும்பினால் பழைய வாழ்க்கைப் பாணியை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே பிராண்டுகள், திரைப்படத் தேர்வுகள் என எல்லாவற்றையும் மாற்றி, தற்போது எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன். இப்போது என் வாழ்க்கையை ஒரு தெளிவான நோக்கத்தோடு வாழ்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.