உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியும், நானும் விமானத்தில் பயணித்தபோது போட்ட ஒப்பந்தம்! : கமல் பேச்சு

ரஜினியும், நானும் விமானத்தில் பயணித்தபோது போட்ட ஒப்பந்தம்! : கமல் பேச்சு


1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க அப்படத்தில் பாண்டியன் என்ற ஒரு கேரக்டரில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதையடுத்து பல படங்களில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் தனித்தனி ஹீரோக்களாக பிரிந்தார்கள்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 'தர்மன்' என்ற படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன் பேசும் போது, ''ஆரம்ப காலத்தில் நானும், ரஜினியும் இணைந்து நடித்து வந்த போது எங்களை இணைத்து படம் எடுக்க பலர் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது ஒரு முறை மும்பைக்கு நாங்கள் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இரண்டு பேரும் தனித்தனியே படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்தோம்.

அதோடு, எங்களில் ஒருவர் மற்றொரு வரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றும் அப்போது நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அது நடப்பதற்கு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக சரியான கதையை நாங்கள் தேடி வந்தோம். ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்தோம். அப்படி அமர்ந்த இரண்டு இளைஞர்கள் இவ்வளவு தூரம் பயணித்திருப்பது பெருமையாக உள்ளது. கண்டிப்பாக நாங்கள் இரண்டு பேரும் வெற்றி பெறுவோம் என்று அப்போது நம்பினோம். ஆனால் இந்த அளவுக்கு பெரிய வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. ரசிகர்களால்தான் நாங்கள் இந்த நிலையை அடைந்துள்ளோம்.

மேலும், ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் தயாரிப்பாளர்தான் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருப்பார். ஹீரோ நிம்மதியாக இருப்பார். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை ரஜினிகாந்த்தான் ஓடி ஆடி வேலை செய்து கொண்டு இருக்கிறார். எங்களை யாரையும் அவர் தூங்க விடவில்லை. இந்த படத்தில் பணி புரிய வேண்டும் என்பதற்காக உற்சாகமான நபர்களை கமல்ஹாசன் தயாரிப்பில் தான் நடிக்கப் போவதாக கூறி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வகையில் ரஜினிகாந்த்தும், மகேந்திரனும் இந்த படத்தின் பெரும்பாலான வேலைகளை செய்துள்ளார்கள். நான் பெயரளவுக்கு மட்டுமே தயாரிப்பாளராக உள்ளேன்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது எங்களது குழுவினர் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களது முயற்சிகளையும் விருப்பங்களையும் அவரிடத்தில் தெரிவித்துள்ளோம். அவர் இந்த படத்தை மிக சிறப்பாக எடுத்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அவருக்காக அவருக்கு பின்னால் ஒட்டுமொத்த படக்குழுவே துணை நிற்கிறது என்பதை அவருக்கு இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கமல்ஹாசன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !