நினைக்காத நாளில்லையே... : கண்ணதாசன், எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா புகழாரம்
தமிழ் சினிமாவில் இருபெரும் மாமேதைகள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்த இரு ஜாம்பவான்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு புகழாரம் சூட்டி உள்ளார்.
அதில், ‛‛தமிழின் கவிதைக்கும் இசைக்கும் அழியாப் புகழ் சேர்த்த இரு பேரறிஞர்கள். அவர்களின் சொற்களும் சுரங்களும் என்றும் நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்'' என பதிவிட்டுள்ளார்.
வீடியோவில், ‛‛உலகெங்கிலும் இசை ரசிகர்கள் கவிஞர் அய்யாவையும், எம்எஸ்வி அண்ணனையும் கொண்டாடி வருகிறார்கள். நீங்கள் எல்லாம் இன்று தான் கொண்டாடுகிறீர்கள். நான் இசையிலேயே இருப்பதால் தினமும் அவர்களை நினைக்காமல் என் வேலையை துவங்க முடியாது. என்னுடைய நினைவு மட்டுமல்ல, அனைவரது நினைவுகளிலும் அவர்கள் நீங்காமல் இடம் பெற்றுள்ளனர். அவர்களது புகழ் என்றென்றும் ஓங்குங்க'' என தெரிவித்துள்ளார்.
கமல்
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும், மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்தநாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.