உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா பாக்யராஜ் பெயரில் வெளியிட்ட கடிதம் : சர்ச்சையில் சாந்தனு

அப்பா பாக்யராஜ் பெயரில் வெளியிட்ட கடிதம் : சர்ச்சையில் சாந்தனு

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் திரைக்கதை மன்னன் என்றழைக்கப்பட்டவர் பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

தனது அப்பா பாக்யராஜ் இறுதிச் சடங்கிற்குப் பின்பு, தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார் மகன் சாந்தனு.

அதன்பின்பு, 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட கடிதம் ஒன்றை பாக்யராஜ் எழுதியது போலவே வெளியிட்டிருந்தார் சாந்தனு. அதில் அவரைப் பற்றி மட்டும், “என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரது சகோதரியான சரண்யா பாக்யராஜ் பற்றி அந்தக் கடிதத்தில் ஒரு வரி கூட இடம் பெறவில்லை. ஆர்யா நடித்து 2006ல் வெளிவந்த “கலாபக் காதலன்'', அடுத்து 2015ல் வெளிவந்த 'வந்தா மல' ஆகிய படங்களை இயக்கிய இகோர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் சரண்யா. அந்தக் காதல் திருமணத்தை பாக்யராஜ் குடும்பத்தினர் ஏற்கவில்லை.

சரண்யாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த பிறகுதான் ஏற்றுக் கொண்டனர். அப்போது கூட மருமகன் இகோரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இப்படியான சூழ்நிலையில் இறந்த ஒருவரது பெயரில் தன்னைப் பற்றிய வார்த்தைகளைச் சேர்த்து சாந்தனு வெளியிட்ட அக்கடிதத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !