உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனித்துவமான இயக்கத்தால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த மகேந்திரன்

தனித்துவமான இயக்கத்தால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த மகேந்திரன்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு இயக்குனர் மகேந்திரன். எத்தனையோ இயக்குநர்கள் வந்தார்கள், போனார்கள் அதில் வெகுசிலரே தனித்துவமான தெரிவார்கள். அப்படிப்பட்ட இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். தனது தனித்துவமான இயக்கத்தால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் என்றால் மிகையல்ல. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் 1939ம் ஆண்டு ஜூலை 25ல் பிறந்த மகேந்திரனின் 87வது பிறந்த தினம் இன்று...

பேச்சாளராக துவங்கி, பத்திரிக்கையாளராக தனது பயணத்தை ஆரம்பித்து எம்ஜிஆரால் சினிமாவிற்கு அழைத்து வரப்பட்டவர். முதல் பணியே பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திரைக்கதை அமைக்கும் பணி அமைந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அது நிகழாமலே போய்விட்டது. எம்ஜிஆரின் காஞ்சித்தலைவன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி, அவருடன் நான்கு ஆண்டுகள் பயணித்துள்ளார்.

‛சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை, நிறை குடம், திருடி, தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம், மோகம் முப்பது வருஷம், வாழந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷி மூலம் போன்ற படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி வெற்றி கண்டார். ரஜினியை வைத்து ‛முள்ளும் மலரும்' படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தையே மாபெரும் ஹிட் படமாக மாற்றி வெற்றி கண்டார்.

தொடர்ந்து ‛‛உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, பூட்டாத பூட்டுகள், மெட்டி, கை கொடுக்கும் கை என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம் பிடித்தார். ரஜினியின் சினிமா வளர்ச்சியில் இயக்குனர் மகேந்திரனின் பங்கு முக்கியமானது. ரஜினியை வேறு ஒரு கோணத்தில் காட்டியவர் மகேந்திரன். இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் அவை ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத படைப்புகள்.

கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்பதை தாண்டி நடிகர் விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் முத்திரை பதித்தார். சாருஹாசன், மோகன், சுஹாசினி உள்ளிட்ட பலரை, சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர் தான். இவர் இயக்கிய, நெஞ்சத்தை கிள்ளாதே படம், மூன்று தேசிய விருதுகளை பெற்றது. வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் அர்த்தம், காட்டுப்பூக்கள் போன்ற தொடர்களை இயக்கி உள்ளார்.

யதார்த்த பாணி சினிமாக்களை தந்து, கலையுலகம் என்ற பெட்டகத்தில் நிலையான இடம் பிடித்து நீடித்த புகழோடு விளங்கும் இயக்குநர் மகேந்திரனின் கலைப்படைப்புகள் அனைத்தும் என்றென்றும் அவர் புகழ் பாடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !