உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற விஜய் : டிக்கெட் கேட்ட ஊழியர்

தனுஷ் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற விஜய் : டிக்கெட் கேட்ட ஊழியர்

நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதல்வராக மாறியுள்ள விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்' தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய பலரும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விஜய்க்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடலாசிரியர் விவேக், சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யும் நானும் சேர்ந்து தனுஷின் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற அனுபவம் குறித்த புதிய தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது நான் அங்கே சென்றிருந்தேன். அந்த சமயத்தில்தான் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படம் வெளியானது. அந்த படத்தில் நான் பணியாற்றி இருந்ததால், அன்று இரவே சென்று அந்த படம் பார்த்துவிட்டு வந்தேன். மறுநாள் அந்த படம் குறித்து விஜய்யிடம் பேசும்போது, 'படம் நன்றாக இருக்கிறது' என்று கூறினேன். அப்போது, 'என்னை ஏன் அழைக்காமல் சென்றாய் என்று செல்லமாக கடிந்து கொண்ட விஜய் 'இன்றைக்கு டிக்கெட் போடு, நாம் படத்திற்கு செல்வோம்' என்றார்.

நான் அவரை எப்படி தியேட்டருக்கு அழைத்து செல்வது என பயந்தேன். ஆனாலும், அவருக்கு யாரும் அறியாமல் தியேட்டரில் சென்று படம் பார்க்கும் வித்தைகள் தெரிந்திருந்தது. அப்படி அன்று இரவு திரையரங்குக்கு சென்றபோது, அவர் எனக்கு முன்பாக சென்றார். அப்போது டிக்கெட் பரிசோதிக்கும் ஊழியர், விஜய்யை யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் அவரிடம், 'டிக்கெட் கொடுங்கள்' என்று கேட்டார். அதற்கு அவர், 'டிக்கெட் என்னிடம் இல்லை என்று கூறி பின்னால் நின்ற என்னை கை காட்டினார்.

என்னிடம் இருந்த ஆன்லைன் டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றோம். எங்களுடன் நண்பர் ஜெகதீஷும் வந்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறியதும், முதல் வேலையாக அப்போதே தனுசுக்கு போன் செய்த விஜய், 'படம் சூப்பராக இருக்கிறது' என்று பாராட்டினார். சக கலைஞர்களின் படங்களையும் பாராட்டும் பெருந்தன்மை விஜய் சாருக்கு ரொம்பவே உண்டு என்று கூறியுள்ளார் விவேக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !