உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் 100 கோடி வசூலைத் தொட்ட அகில் நாகார்ஜுனா

முதல் 100 கோடி வசூலைத் தொட்ட அகில் நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சினிமா குடும்பங்களில் முக்கியமான ஒரு குடும்பம் அக்கினேனி நாகேஸ்வரராவ் குடும்பம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏ.நாகேஸ்வரராவ் என்றால்தான் தெரியும். தமிழில் 'ஓர் இரவு, பூங்கோதை, தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி, அலாவுதீனும் அற்புத விளக்கும்(1957), மஞ்சள் மகிமை, கல்யாண பரிசு, தூய உள்ளம்,” உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் நடித்தவர். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவரது மகன் நடிகர் நாகார்ஜுனா தமிழில் 'ரட்சகன், தோழா' ஆகிய நேரடிப் படங்களிலும், 'இதயத்தைத் திருடாதே' டப்பிங் படம் மூலமும் தமிழ் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானர். அவருக்கும் அவரது காதல் மனைவி அமலாவுக்கும் அகில் என்ற ஒரே மகன். அவரும் தெலுங்கு சினிமாவில் நாயகனாக உள்ளார்.

கதாநாயகனாக கடந்த 10 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஆறு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் ஓரிரு படங்கள் மட்டும்தான் சுமாரான வெற்றியைப் பெற்றது. பிளாக்பஸ்டர் வெற்றிக்காகக் காத்திருந்தவருக்கு சமீபத்தில் வந்த 'லெனின்' பெற்றுத் தந்துள்ளது.

தற்போது அந்தப் படம் 100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இது குறித்து அகில், “நம்பிக்கை வைத்து, ஆதரவளித்து, ஏற்றுக் கொண்ட அனைவருக்கும்... இது உங்களுக்கானது. மிகுந்த நன்றியுணர்வுடன் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறேன். நன்றி; விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா ஏற்கெனவே சில 100 கோடி படங்களைக் கொடுத்துள்ளார். அவரது மூத்த மகன் நாக சைதன்யா கடந்த வருடம் வெளிவந்த 'தண்டேல்' படம் மூலம் அவரது முதல் 100 கோடியைக் கொடுத்தார். தற்போது அகில் அவரது முதல் 100 கோடி படத்தைக் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !