வசனமே இல்லாத கேரக்டரில் நடிக்கும் ரைசா வில்சன்
'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் பிரபலமானவர் 'பிக்பாஸ்' புகழ் ரைசா வில்சன். அதன் பிறகு தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, எப்ஐஆர், மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் 'நோவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு வசனமே இல்லையாம். உடல்மொழியால் பேசி நடித்திருக்கிறாராம்.
இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநர் மைலோ கூறியதாவது: தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளோம். பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
'நோவா'வில் ரைசா வில்சனின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக, ரைசாவின் கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட கிடையாது. ஆனால் வசனங்கள் இல்லாமலேயே பார்வை மற்றும் உடல் மொழியின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் இருப்பை உணர்த்தியிருக்கிறார். ரைசாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறு விதமாகப் பார்க்கலாம். அவருக்கு வசனமே கிடையாது. ஆனால் அவருடைய பார்வையே நிறைய விஷயங்களைச் சொல்லும்,” என்கிறார் மைலோ
ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடித்துள்ளனர்.