பிளாஷ்பேக்: கஸ்தூரி ராஜா, ராஜ்கிரண் கலையுலகப் பயணத்தின் முதல் வெற்றி
பழம்பெரும் இயக்குநர் மறைந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மறைந்த இயக்குநர் விசு ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, பின் 1990களின் ஆரம்பத்தில் கிராமத்து பின்னணியைக் கொண்ட குடும்பக் கதைகளைக் தனது முதன்மையான கதைக் களங்களாக எடுத்துக் கொண்டு திரையுலகிற்கு அறிமுகமான ஒரு இயக்குநர்தான் கஸ்தூரி ராஜா. இவரது முதல் படைப்பான “என் ராசாவின் மனசிலே” திரைப்படம் தொடங்கி, “ஆத்தா உன் கோயிலிலே”, “சோலையம்மா”, “நாட்டுப்புறப் பாட்டு”, “எட்டுப்பட்டி ராசா”, “வீரத்தாலாட்டு”, “என் ஆச ராசாவே”, “கும்மிப் பாட்டு” என இவரது பெரும்பாலான படைப்புகள் எல்லாம் கிராமங்களைப் பின்னணியாகக் கொண்டே எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். ஏறக்குறைய இதே காலகட்டங்களில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மற்றொரு திரைக் கலைஞர்தான் நடிகர் ராஜ்கிரண்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மையோடு கலையுலகிற்கு அறிமுகமான இவர், ஆரம்ப காலங்களில் ஒரு சினிமா விநியோகஸ்தராக தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்து, பின் 1987ல் “ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்” என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்க, இயக்குநர் டி கே போஸ் இயக்கத்தில் “ராசாவே உன்ன நம்பி” என்ற திரைப்படத்தை முதன் முதலாக தயாரித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ராமராஜனையே நாயகனாக வைத்து, “என்னப் பெத்த ராசா” என்ற படத்தை தயாரித்ததோடு, அந்தப் படத்தில் ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரமேற்று நடித்து, ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தனது “ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்” சார்பில் இவர் தயாரித்த திரைப்படம்தான் “என் ராசாவின் மனசிலே”. இத்திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கும் வாய்ப்பினை கஸ்தூரி ராஜாவிற்கு வழங்கி, அவரை கலையுலகிற்கு ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் ராஜ்கிரண். தனது சொந்த கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில், கதையின் நாயகனாக இவர்கள் தேர்வு செய்ய இருந்தது நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் சத்யராஜ். இருவரும் அப்போது பிஸியாக இருந்த காரணத்தால், ராஜ்கிரணே நாயகனாக நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, முதன் முதலாக படத்தின் நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்குச் சிறப்புச் சேர்த்திருந்தார் ராஜ்கிரண். இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படம், அறிமுக இயக்குநராக களம் கண்ட இயக்குநர் கஸ்தூரி ராஜாவிற்கும், நாயகனாக களம் கண்ட நடிகர் ராஜ்கிரணுக்கும் ஒரு வெள்ளிவிழா திரைப்படமாகவே அமைந்திருந்தது.
இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் கஸ்தூரி ராஜா, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து, தமிழ் திரைப்பட ரசிகர்களின் இதயங்களில் ஒரு தரமான இயக்குநராக அடையாளம் காணப்பட்டு, தனக்கான ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இத்திரைப்படத்தின் வெற்றிதான் தயாரிப்பாளர் ராஜ்கிரணை நாயகன் ராஜ்கிரணாக மாற்றமடையச் செய்தது. ராஜ்கிரண் ஒரு முழுநேர நடிகராக மாறக் காரணமாக அமைந்த திரைப்படமும் இதுவே. இவ்வாறு இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் நடிகர் ராஜ்கிரண் என்ற இந்த இருபெரும் திரைக்கலைஞர்களின் கலையுலக வாழ்வில் அவர்கள் அடைந்த முதல் வெற்றிக்காண உறுதி செய்த திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்த “என் ராசாவின் மனசிலே”.