உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரபரப்பில்லாத செப்டம்பர் முதல் வார ரிலீஸ்

பரபரப்பில்லாத செப்டம்பர் முதல் வார ரிலீஸ்

தமிழ் சினிமா உலகில் இந்த வருடத்தில் மிகப் பெரும் வெற்றிகள் என 5 படங்களைக் கூட சொல்ல முடியாத ஒரு நிலையே கடந்த 8 மாதங்களாக இருந்து வருகிறது. லாபத்தைக் கொடுத்த ஒரே ஒரு 300 கோடி படமாக சூர்யா நடித்த 'கருப்பு' படம் அமைந்தது. சில சிறிய படங்கள் எதிர்பாராத அளவில் ஓடி குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளன.

நாளை பிறக்க உள்ள செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 4ம் தேதி பெரிய படங்கள் என எதுவும் வெளியாகவில்லை. ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'இம்மார்டல்', டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வரும் புகழ் நடித்த '4 இடியட்ஸ்', மற்றும் 'ஆக்குவாய் காப்பாய், நாகரீக பயணம்' ஆகிய படங்கள் அன்றைய தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மலையாளத்தில் 100 கோடி வசூலித்த நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் தமிழில் டப்பிங் ஆகி அன்றைய தினம் வெளியாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கடைசி மூன்று மாதங்களில் வெளியாகும் 'ஜெயிலர் 2, பத்தா, ஓம்' உள்ளிட்ட சில படங்கள் மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இவற்றோடு வெளியீட்டு அறிவிப்புகளுக்காக சில படங்கள் காத்திருக்கின்றன.

கடைசி கால் வருடத்திலாவது தமிழ் சினிமா வசூல் சாதனை புரியுமா என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !