கடும் போட்டியில் அனிருத், சாய் அபயங்கர்
தமிழ் சினிமா என்பது 'ஜென் ஸி' இயக்குனர்களிடமும், ரசிகர்களிடமும்தான் தற்போது சிக்கிக் கொண்டிருக்கிறது. அழுத்தமில்லாத கதைகள் மூலம் மேக்கிங் மட்டும் சிறப்பாக இருந்தால் போதும் என அப்படியான இயக்குனர்கள் ஒரு பக்கம் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் 'ஜென் ஸி' ரசிகர்கள் மட்டும் ரசித்தால் போதும் என அவர்கள் ரசிக்கும் இசை இதுதான் என அனிருத், சாய் அபயங்கர் என சிலர் ரசிப்புத் தன்மையை மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
யு டியுப் தளங்களிலும், அதிக ரீல்ஸ்களிலும் எந்தப் பாடல் அதிகப் பார்வைகளைப் பெறுகிறதோ அதுதான் சிறந்த பாடல் என இன்றைய தலைமுறை ரசித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் தற்போது அனிருத் மற்றும் சாய் அபயங்கர் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் வெற்றி, அனிருத் இசை என தனி அடையாளம் ஏற்கெனவே இருந்தாலும் அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படத்தின் முதல் சிங்கிள் 'அல்ல பொலேலோ' பாடல் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் யு டியூப் தளத்தில் தற்போது 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ஏற்கெனவே தனது ஆல்பங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளரான சாய் அபயங்கர், அவரது அடுத்த ஆல்பம் பாடலான 'ரதிமா' பாடலை ஒரு வார முன்னதாக வெளியிட்டார். அந்தப் பாடல் 'அல்ல பொலேலோ' பாடலை விட 1 மில்லியன் பார்வைகளை அதிகம் பெற்று 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினிகாந்த், அனிருத் இசை என அந்தப் பிரபலத்தையும் கடந்த சாய் அபயங்கரின் பாடல் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளதை இசை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.