உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 3 முறை சினிமாவான 'பட்டினத்தார்' வாழ்க்கை

பிளாஷ்பேக் : 3 முறை சினிமாவான 'பட்டினத்தார்' வாழ்க்கை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் வணிகத்தில் செல்வாக்கு மிக்க நகரத்தார் சமூகத்தில் பெரும் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த திருவெண்காடர் என்ற வணிகர், வாழ்க்கையின் பற்றுகளை துறந்து பட்டாடைகள் மட்டுமே அணிந்த அவர் ஒரு கோவணத்தை மட்டுமே அணிந்து கொண்டு. உணவுக்கும், உதவிக்கும் எப்போதும் ஒரு கரும்பை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு மனிதனின் அறியாமை, பேராசை, அவனது சிற்றின்பங்கள், அவனது அழிவு ஆகியவற்றை மையமாக வைத்து பாடல்கள் புனைந்தவர். போகிற போக்கில் பல்லாயிரம் பாடல்களை பாடினார். ஆனால் நமக்கு கிடைத்தது சில பாடல்கள்தான். அவரை தமிழ் சமூகம் பட்டினத்தார் என்று அழைத்தது.

அவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவி இருந்த காரணத்தால் சினிமா வந்த புதிதிலேயே சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்து வெளியான முதல் படம் 1935ல் வெளியானது. ஆனால் தோல்வியடைந்தது. அடுத்த ஆண்டே எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்த படம் வெளியாகி வெள்ளிவிழா கண்டது. தேசிகரே இசையமைத்து, பாடிய இந்தப் படத்தில் மொத்தம் 52 பாடல்கள். இதுவே சாதனை அளவாகும். சென்னை பிராட்வே திரையரங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படம் இதுதான்.

இந்த படம் வெளியாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு 1962ல் வெளியானது டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்து வெளியான படம். இயக்குநர் கே.சோமு திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப் படத்துக்கு தஞ்சை ராமய்யாதாசும் நாவலாசிரியர் அகிலனும் வசனமும், பாடல்களையும் எழுதினார்கள்.

இந்த படத்தில் பட்டினத்தாராக டி.எம்.சவுந்தர்ராஜனை நடிக்க வைத்தது எம்ஜிஆர். தனது மேக்அப் மேன் பீதாம்பரத்தை (பி.வாசுவின் தந்தை) அவருக்கு பட்டினத்தார் மேக்அப் போடச் செய்து சம்மதிக்க வைத்தார். பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக ஜெமினி கே.சந்திரா நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !