பிளாஷ்பேக்: வில்லங்க கதையும், வெட்டிச் சாய்த்த தணிக்கையும்
1991ம் ஆண்டு வெளியான படம் 'இரும்பு பூக்கள்'. ஜி. எம். குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இவர்களுடன் சத்யஜித், லிவிங்ஸ்டன், குமரி முத்து ஆகியோர் நடித்தனர். பிரபுவும், ரேகாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர்.
இந்த படம் தணிக்கை குழுவிற்கு சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். முதலில் படத்திற்கு தணிக்கை சான்று தரமுடியாது என்றார்கள். பின்னர் எந்த காட்சியை வேண்டுமானாலும் வெட்டிக் கொள்ளுங்கள் தணிக்கை சான்று தாருங்கள் என்று கேட்ட பிறகு கிட்டத்தட்ட 20 சதவிகித காட்சிகளை வெட்டி தணிக்கை சான்று கொடுத்தார்கள்.
அப்படி என்ன வில்லங்க கதை தெரியுமா?. சத்யஜித் ஒரு அரசியல்வாதி. அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாததால அவரால் ஆட்சி அமைக்க முடியாது என ரிப்போர்ட் வருகிறது. எதிர்கட்சியினரின் பலமே பெண்கள் ஓட்டு தான். அந்த பெண்கள் வாக்கை பெற வேண்டும் என்பதற்காக தனது கட்சியில் மகளிர் அணி கூட்டம் ஒன்றை உருவாக்குகிறார்.
அந்த பெண்களை தனது ஆட்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று அந்த பழியை எதிர்கட்சி மீது போட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுவது போன்று நடித்து தனது செல்வாக்கை வளர்த்து வருவார்.
இந்த தொடர் கொலைகளை தடுக்க முடியாமல் போலீஸ் திணரும். இந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கார்த்திக் இதை கண்டுபிடித்து சத்யஜித்தை சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் படத்தின் கதை.
கதையில்பாலியல் வன்முறை காட்சிகள் இருந்ததாலும், அப்போது ஒரு அரசியல் கட்சியை படம் மறைமுகமாக குறிப்பிட்டதாலும்தான் தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்தனர். பின்னர் ஒரு வழியாக படம் வெளியானது.