உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹீரோ - இயக்குநர் மோதலால் தோல்வி அடைந்த படம்

பிளாஷ்பேக் : ஹீரோ - இயக்குநர் மோதலால் தோல்வி அடைந்த படம்

இந்தியாவில் புகழ்பெற்ற காதல் கதை 'பிரித்விராஜ் - சம்யுக்தா'. இந்தக் கதையை தழுவி நிறைய படங்கள் வந்தன. தமிழில் 1962ல் 'ராணி சம்யுக்தா' என்ற பெயரில் ஒரு படம் உருவானது. கன்னோஜியின் மன்னரான ஜெய்சந்திரன் மகள் சம்யுக்தா. பக்கத்து நாட்டு மன்னனான பிரித்விராஜை கண்டதும் காதல் கொள்கிறார். அவரும் சம்யுக்தாவை தீவிரமாக காதலிக்கிறார். இந்தக் காதல் விவகாரம் பற்றி அறிந்த ஜெய்சந்த் கோபமடைந்து, தன் மகளை வேறொருவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். இதற்காக அவர் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்கிறார்.

அருகிலும் தொலைவிலும் உள்ள தகுதியான மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரையும் அவர் அழைக்கிறார், ஆனால் வேண்டுமென்றே பிரித்விராஜை மட்டும் அழைக்காமல் தவிர்க்கிறார். பிரித்விராஜை அவமானப்படுத்தும் நோக்கில், அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு களிமண் சிலையைச் செய்து, சுயம்வரம் நடைபெறும் இடத்தின் நுழைவாயிலில் அதை நிறுவுகிறார்.

கண்ணீருடன் சுயம்வர மண்டபத்திற்குள் நுழையும் சம்யுக்தா, தன் காதலன் பிரித்விராஜின் சிலையைக் கண்டு, அதை நோக்கி நடந்து சென்று அதற்கு மாலை அணிவிக்கிறார். அதுவரை சிலையின் பின்னால் மறைந்திருந்த பிரித்விராஜ், அவரைத் தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு சென்று திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த புகழ்பெற்ற கதையில் பிருத்விராஜாக எம்ஜிஆரும், ராணி சம்யுக்தாவாக பத்மினியும் நடித்தனர். இவர்களுடன் எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஜி. சக்ரபாணி, கே.ஏ. தங்கவேலு, எம்.என். ராஜம், எம். சரோஜா மற்றும் மோகனா நடித்தனர். ஏ.சி. பிள்ளை இப்படத்தைத் தயாரித்தார், கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். திரைக்கதை, வசனம், பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வணிகரீதியாக தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் படக்குழுவினர் உடன் எம்ஜிஆர் ஏற்பட்ட சில பிரச்னைகளால் இந்த படம் தோல்வி அடைந்ததாக கூறப்படுவது உண்டு. மேலும் எம்ஜிஆர் படத்திற்கே உண்டான விஷயங்கள் படத்தில் இல்லை என்பதும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்ததால் படம் வரவேற்பை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !