ரேஸிங்கில் இருந்து எப்பதான் ஷூட்டிங் வருவார் ? அஜித் ஏரியா அப்டேட்ஸ்…
அப்டேட் எதுவுமின்றி அப்செட்டிலிருந்த அஜித் ரசிகர்கள் சற்றே ஆசுவாச மோடுக்கு வந்திருக்கிறார்கள். பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்த கதையாக, இன்னொரு படம் ரிலீஸாகியிருக்க வேண்டிய நேரத்தில் அட்லீஸ்ட் ஒரு டிரைலரிலாவது 'தல' தரிசனம் கிடைத்ததே என்கிற ஆறுதல்தான் அது.
'குட் பேட் அக்லி'க்குப் பின்னர் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆகியும் அஜித் தனது அடுத்த படத்தை துவங்கவில்லை. புதிய படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் தயாரிக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என்பதைத் தவிர்த்து புதிய அப்டேட்கள் எதுவும் வரவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஹைதராபாத்தில் செட் வேலைகள் துவங்கப்பட்டு பல படப்பிடிப்பு தேதிகள் அறிவிக்கப்பட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
கிளாடியேட்டர்ஸ் துவக்கப்புள்ளி
இந்த நிலையில்தான் அவரது கார் ரேஸ் சம்பவங்கள் 'கிளாடியேட்டர்ஸ்' என்கிற பெயரில் ஒரு முழு ஆவணப்படமாக திரைக்கு வரவிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு அஜித் ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்க்கப்பட்டுள்ளது. இந்த 'கிளாடியேட்டர்' ஆவணப்படம் ஒரு திரைப்பட அனுபவம் தந்து ரசிகர்களை திருப்திப்படுத்துமா? விநியோகஸ்தர்கள் விலை கொடுத்து வாங்குவார்களா? தியேட்டரில் கல்லா கட்டுமா? அஜித் ரசிகர்கள் தாண்டி பொதுமக்கள் இப்படத்தைப் பார்ப்பார்களா ? போன்ற சந்தேகங்களுக்குள் போகுமுன், இதன் துவக்கப் புள்ளியை தெரிந்துகொள்ளலாம்.
2023 செப்டம்பர். அஜர்பைஜானில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு. அஜித்தும் நடிகர் ஆரவ்வும் பயணித்த ஹாம்மர் கார் எதிர்பாராத விபத்துக்குள்ளாக, காருக்குள்ளே இருக்கும் அஜித் ஆரவ்விடம் 'ஆர் யு ஓகே.. ஆர்.யு.ஓகே' என வீக்கான குரலில் கேட்கும் பதைபதைப்பான காட்சிகளை யாரும் அவ்வளவு லேசில் மறந்திருக்க முடியாது.
விபத்து நடந்த சமயம் அதை விளம்பரத்துக்காக வெளியிட வேண்டாம் என்று அஜித் தயாரிப்பு நிறுவனத்தைத் தடுத்திருந்தாலும் படம் டிராப் ஆகிவிட்டது என்று தொடர்ந்து வதந்திகள் பரவியதால், 'எப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்து உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதை எப்படி டிராப் செய்வோம்?' என்ற அறிவிப்புடன் அவ்வீடியோ வெளியிடப்பட்டது. அதைப்பார்த்து பல மில்லியன் ரசிகர்கள் அஜித்துக்காக துடித்தார்கள்.
இப்போது கிளாடியேட்டருக்கு வருவோம்.
'விடா முயற்சி'யில் நடந்த அந்த ஒரு விபத்துக் காட்சிதான் அஜித் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாளும் நடப்பது. வெறும் நடிகராக மட்டுமல்ல… விளையாட்டு வீரனாக தன்னைத்தானே அஜித் செதுக்கிக்கொள்ளும் காட்சிகள்தான் இந்த 'கிளாடியேட்டர்' ஆவணப்படம். சுருக்கமாகச் சொன்னால் அஜித் கார் ரேஸ்களில் கலந்தது… விழுந்தது… எழுந்ததுதான் இந்த கிளாடியேட்டர்.
100 நிமிடங்கள்
ஜி.வி.பிரகாஷ் தனது மொத்த வித்தையையும் இறக்கி பின்னணி இசையமைக்க, ஆன்டனி எடிட் செய்ய சரியாக 100 நிமிடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பாதி 50 நிமிடம். இடைவேளைக்குப் பின்னர் 50 நிமிடம். முழுநேர சினிமா பணியில் இறங்கியிருக்கும் மனைவிக்கு மரியாதை செய்யும் விதமாக ஷாலினியின் பிறந்த நாளான நவம்பர் 20, வெள்ளியன்று இப்படம் உலகம் முழுக்க ரிலீஸாகிறது. தமிழகத்தில் சுமார் 600 திரையரங்குகளில் வெளியிட திட்டம்.
படத்தின் இயக்குநரான ஏ.எல்.விஜய், அஜித், ஷாலினி, நடிகை அனுஷ்கா, வெங்கட் பிரபு, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. கிளாடியேட்டரின் முதல் பார்வையாளராக நண்பரும் முதல்வருமான ஜோசப் விஜய் இருக்கவேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். தகவல் பாஸ் செய்யப்பட்டு 'தம்ஸ் அப்' கிடைத்திருக்கிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் ஆவணப்படம் என்கிற காரணத்துக்காக வரிவிலக்கும் கிடைக்க வாய்ப்புண்டு. விளையாட்டுதிறனை ஊக்குவிக்கும் முதல்வர் விஜய்யின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அஜித் அனுப்பிய கடிதத்துக்கு இங்கே ஒரு இன்டர்கட்.
புரமோஷனில் அஜித்
இன்னொரு எக்ஸ்க்ளூசிவ்… சுமார் 25 ஆன்டுகளாக தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாத அஜித் இப்படத்துக்காக இரன்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவை என்ன என்பது சஸ்பென்ஸ்.
இதெல்லாம் ஓகே பாஸ். 'டேர் டெவில்' ஷூட்டிங் எப்பதான் ஸ்டார்ட் ஆகுது?
அப்படத்தின் கதை விவாதம் முற்றிலுமாக முடிந்து, நிதி நிலவரங்கள் தேவைக்கும் அதிகமாக வந்து சேர்ந்திருக்கும் நிலையில் அக்டோபரில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருக்கிறார்களாம். ஏற்கனவே சில முறை படப்பிடிப்பு தள்ளிப்போன வகையில், கதாநாயகி தொடங்கி முக்கிய கேரக்டர்களுக்கான அனைவரையுமே இனிமேல்தான் கமிட் பண்ண வேண்டியிருக்கிறது என்பதால் நவம்பருக்கு நகர்ந்தாலும் ஆச்சர்யமில்லை.