தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா
தமிழ் சினிமா, இந்த 2026ம் ஆண்டில் 150 படங்களைக் கடந்துவிட்டது. இடையில் ஒரு சில வாரங்களில் மிகவும் குறைவான படங்கள் வெளியானதால் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 20 படங்கள் வரை குறைவாகவே வெளியாகி உள்ளது.
ஆனால், வரும் வாரங்களில் இந்த வருடம் முழுமைக்கும் இடைவிடாமல் தொடர்ச்சியாக படங்கள் வர உள்ளது. அடுத்த வாரம் செப்டம்பர் 18ம் தேதி வெளியீடுகளாக ஐந்துக்கும் மேற்பட்ட படங்களின் வெளியீடுகளை ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்.
அதற்கடுத்து செப்டம்பர் 25, அக்டோபர் 1, 2, 15, 16, நவம்பர் 6 என சில முக்கிய படங்களின் அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களும், சிறிய பட்ஜெட் என்றாலும் சில முக்கிய படங்களும் வெளியாக உள்ளன.
இவை தவிர, அனைத்தும் முடிந்து சில படங்களுக்குச் சென்சார் சான்றிதழும் பெற்ற படங்களும் தயாராகவே உள்ளன. எந்த இடைவெளியில் படத்தை வெளியிடுவது என அவர்களும் யோசித்து வருகிறார்கள்.
ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், என பண்டிகை நாட்கள் இதர விடுமுறை நாட்கள் என பல படங்கள் களத்தில் இறங்க உள்ளன. தமிழ்ப் படங்கள் தவிர இதர மொழிகளிலும் தயாராகி உள்ள சில படங்கள் டப்பிங் ஆகி வெளியாக உள்ளன. சினிமா ரசிகர்களுக்காக நிறைய படங்கள் வர உள்ளன. ஆனால், அவர்களைக் கவரும் விதத்தில் படங்கள் இருப்பதுதான் அவசியம்.