PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

'தொடர்ந்து, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடிக்கலாம் என நினைத்தால், அதற்கும் முட்டுக்கட்டை போடுகின்றனரே...' என, சோகத்தில் ஆழ்ந்துள்ளார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில், ஒருமுறை ஆட்சியை பிடித்த கட்சி, அடுத்த முறை தோல்வி அடையும் என்பது கடந்த கால வரலாறு. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் இப்படித்தான் மாறி மாறி ஆட்சி அமைத்தன.
ஆனால், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பினராயி விஜயன், கடந்த கால வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்தாண்டு ஏப்ரலில், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க திட்டமிட்டிருந்தார், பினராயி விஜயன். சமீபத்தில் நடந்த நிலம்பூர் சட்டசபை இடைத்தேர்தல் இதற்கு பெரிய தடையாக அமைந்து விட்டது.
இதில், ஆளுங்கட்சி வேட்பாளரை, காங்கிரஸ் வேட்பாளர், 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 'ஆளுங்கட்சியாக இருந்து என்ன பிரயோஜனம்; இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே...' என, பினராயி விஜயனை அவரது கட்சியினரே வறுத்தெடுக்கின்றனர்.
'ஒரு தொகுதியில் கட்சியை வெற்றி பெற வைக்க முடியாதவர், சட்டசபை தேர்தலில் எப்படி வெற்றி பெற வைப்பார்? முதல்வர் பதவியில் இருந்து பினராயி விஜயனை நீக்குங்கள்...' என, கட்சியில் உள்ள அவரது அதிருப்தியாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.