PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

'ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா...' என, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஷ்வினி வைஷ்ணவிடம் கொந்தளிக்கின்றனர், அந்த துறையில் உள்ள மூத்த அதிகாரிகள்.
ரயில்வே அமைச்சர் பொறுப்பை வகிக்கும் அஷ்வினி வைஷ்ணவ் தான், தகவல் தொழில்நுட்ப துறையையும் கவனிக்கிறார். இரண்டுமே மிக முக்கியமான துறைகள் என்றாலும், மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படாததால், இந்த இரண்டு பொறுப்புகளையுமே அவர் தான் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
புதிய தொழில்நுட்பங்கள் மீது ஆர்வம் உள்ள வைஷ்ணவ், 'மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள், 1.3 லட்சம் ரூபாய் மதிப்பில், 'தலா, ஒரு மொபைல் போன், லேப் - டாப் கம்ப்யூட்டர்' வாங்கிக் கொள்ளலாம்' என, அறிவிப்பு வெளியிட்டார். இதனால், அந்த துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சந்தோஷமடைந்தனர்.
அதே நேரத்தில், ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, இது போல, எந்த சலுகை அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதனால், ரயில்வே துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
'தகவல் தொழில்நுட்ப துறை முக்கியமானது தான். அதுபோல, ரயில்வே துறையும் முக்கியமானது தானே. எங்களுக்கு மட்டும் சலுகை காட்டாதது ஏன்... ஒரே அமைச்சர், இரண்டு துறைகளையும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது சரி தானா...' என, ஆவேசப்படுகின்றனர்.