PUBLISHED ON : ஜன 24, 2024 12:00 AM

'ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி இப்படிசெய்யலாமா...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி அதிருப்தியுடன் கூறுகிறார், அசாம் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா.
கடந்தாண்டு, 'பாரத ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார், ராகுல். தற்போது, லோக்சபா தேர்தல் நெருங்குவதை அடுத்து, மீண்டும் அதே போன்று, 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் யாத்திரையை துவக்கி உள்ளார்.
சமீபத்தில், வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் துவங்கிய யாத்திரை, அசாம் மாநிலத்துக்கு சென்றது. அப்போது, வழியில் ஏராளமான பா.ஜ., வினர், 'ஜெய்ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கிய ராகுல், பா.ஜ.,வினரை நோக்கி சென்று கைகளை அசைத்தார்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார், ராகுலை மீண்டும் பஸ்சில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த பிரச்னையை சுட்டிக்காட்டி, அசாமில் பா.ஜ.,வினர் தன்னை தாக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டினார், ராகுல்.
இதனால் கடுப்பான ஹிமந்த பிஸ்வ சர்மா, 'ராகுல், பஸ்சை விட்டு இறங்காமல் சென்றிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து விளம்பரம் தேட முயற்சிக்கிறார். ஒற்றுமை என்ற பெயரில் யாத் திரை நடத்தி, வேற்றுமையை ஏற்படுத்த துடிக்கிறார்...' என, பொருமுகிறார்.

