PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

'எந்த அதிகாரமும் இல்லாததால் விரக்தியில் இருக்கிறார். அதனால் தான், ஏமாற்றத்தை இப்படி வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகளாகி விட்டன. அவர் தலைவராக பொறுப்பேற்ற பின், காங்கிரசுக்கு பெரிய அளவில் எந்த தேர்தலிலும் வெற்றி கிடைக்கவில்லை. அடுத்து வரும் பீஹார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரசை வெற்றி பெற வைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது, கார்கேவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர், பிரதமர் மோடியை தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார். அவரை கட்சியை விட்டு நீக்குவதா, 'சஸ்பெண்ட்' செய்வதா அல்லது பொருட்படுத்தாமல் விட்டு விடுவதா என தெரியாமல் திணறி வருகிறார்.
சசி தரூரை கட்சியை விட்டு நீக்குவதற்கு சோனியா, ராகுல் உள்ளிட்டோரிடம் இருந்து இன்னும், 'சிக்னல்' கிடைக்கவில்லை. இதனால், குழப்பமடைந்துள்ள கார்கே, 'நம் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு, இந்த நாட்டை விட, பிரதமர் மோடியைத் தான் ரொம்ப பிடிக்கிறது. ஆனாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை...' என, அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
காங்., நிர்வாகிகளோ, 'கார்கேயின் நிலைமை பரிதாபகரமானது தான்...' என, ஆதங்கப்படுகின்றனர்.