PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

'நீண்ட தேடுதல் வேட்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது...' என, டில்லி முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ரேகா குப்தாவின் வீடு பார்க்கும் படலம் குறித்து கிண்டலாக பேசுகின்றனர், இங்குள்ள எதிர்க்கட்சியினர்.
கடந்த பிப்ரவரியில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றார். தற்போது, டில்லி புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். டில்லியில் இவருக்கு அரசு பங்களா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.
ஆனால், வி.வி.ஐ.பி.,க் கள் வசிக்கும் லுாட்டியன்ஸ் பகுதியில் தனக்கு பங்களா ஒதுக்கித் தரும்படி அவர் வலியுறுத்தியதை அடுத்து, அங்கு அரசு பங்களா எதுவும் காலியாக உள்ளதா என, அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளிட்ட பல வி.வி.ஐ.பி.,க்களின் பங்களாக்கள் இந்த பகுதியில்தான் உள்ளன; இங்கு இருக்கும் பெரும்பாலான பங்களாக்கள் அரசுக்கு சொந்தமானவை.
மூன்று மாதங்களாக தேடியும், லுாட்டியன்ஸ் பகுதியில் அரசு பங்களா எதுவும் காலியாக இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, சிவில் லைன் பகுதியில் ரேகா குப்தாவுக்கு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது; விரைவில் அங்கு குடியேற உள்ளார்.
'ஆசைப்பட்ட பங்களா கிடைக்காவிட்டாலும், கிடைத்த பங்களாவில் வசிப்பதுதான் புத்திசாலித்தனம்...' என, தன் உறவினர்களிடம் கூறி வருகிறார், ரேகா குப்தா.