PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

'ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்; ஆனால் அந்த நினைப்பு, அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடக் கூடாதே...' என ஹிமாச்சல பிரதேச முதல்வரும், காங்., கட்சியைச் சேர்ந்தவருமான சுக்வீந்தர் சிங் சுகு பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
சுக்வீந்தர் சிங் சுகு, சமீபத்தில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள துபாய் நகரின் அழகை பார்த்து வியந்த அவர், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் அங்கு தினமும் வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
இதையடுத்து, 'ஹிமாச்சலிலும் இதுபோன்ற நகரை உருவாக்கி, சுற்றுலா வருவாயை பெருக்க வேண்டும்...' என, முடிவெடுத்தார்.
ஹிமாச்சல் திரும்பியதும், அங்குள்ள தர்மசாலா நகரை, துபாய் போல மாற்ற முடிவு செய்து, அதற்கான சில முதல் கட்ட உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்படி, தர்மசாலாவில் இரவு முழுதும் கடைகள், வணிக வளாகங்களை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளார்.
தர்மசாலாவில் உள்ள மக்களோ, 'சுற்றுலா வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற முதல்வரின் முடிவு சரி தான். ஆனால், ஆன்மிக நகரமான தர்மசாலாவை வணிக நகரமாக மாற்றும் அவரது முடிவு தேவையில்லாத சர்ச்சைக்கு வழி வகுக்கும்...' என, கவலைப்படுகின்றனர்.
இதைக் கேள்விப்பட்ட சுக்வீந்தர், 'இது என்ன வம்பு...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள் ளார்.

