/
தினம் தினம்
/
அக்கம் பக்கம்
/
குழப்பத்துக்கு தீர்வு கிடைக்குமா?
/
குழப்பத்துக்கு தீர்வு கிடைக்குமா?
PUBLISHED ON : ஜன 26, 2024 12:00 AM

'சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல், அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைப்படி முடிவெடுத்தால் இப்படித் தான் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்...' என கர்நாடக முதல்வரும், காங். மூத்த தலைவருமான சித்தராமையாவை கிண்டலடிக்கின்றனர், அங்குள்ள பா.ஜ.வினர்.
சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் காங். சார்பில் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. கட்சி தலைமையின் இந்த முடிவை வரவேற்று பேட்டி அளித்தார், சித்தராமையா.
அடுத்த நாளே, 'கும்பாபிஷேகத்தன்று அயோத்திக்கு போகா விட்டாலும், அடுத்த சில நாட்களில் அங்கு சென்று ராமரை தரிசிப்பேன்...' என, அறிவித்தார். சித்தராமையா சமீபகாலமாக அடிக்கடி தன் முடிவை மாற்றி மாற்றி அறிவிப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கூறிய கர்நாடகா மாநில பா.ஜ.வினர், 'சித்தராமையாவுக்கு ஏற்கனவே மூன்று ஆலோசகர்கள் உள்ளனர்; இது தவிர, அரசியல் ஆலோசகர்களாக இருவரை நியமித்துள்ளார். இவர்கள், மாநில அமைச்சர்கள் அந்தஸ்திலான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
'இது போதாது என, சமீபத்தில் மேலும் மூன்று ஆலோசகர்களை நியமித்துள்ளார், சித்தராமையா. இவர்களுக்கும் அமைச்சர்களுக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனையை கூறுவதால், அவற்றில் எதை செயல்படுத்துவது என தெரியாமல், அடிக்கடி முடிவை மாற்றுகிறார்.
'இன்னும் எத்தனை ஆலோசகர்களை நியமித்தாலும், குழப்பம் அதிகரிக்குமே தவிர, தீர்வு ஏற்படாது. பாவம் சித்து...' என, கிண்டலடிக்கின்றனர்.

