PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM
புகையை ஈர்க்குமா புவி ஈர்ப்பு
பூமியில் காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்கும். இதனால் புகையைவிட, காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மேல் நோக்கிச் செல்லும். அதாவது புவி ஈர்ப்பு விசையால்தான் புகை மேலே செல்கிறது. இந்தப் புகையைப்போலதான் மென்மையான நீராவியும்
மேல் நோக்கிச் செல்கிறது. அது மேகமாக மாறி, பின் மழையாகப் பொழிகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் புகையோ, நீராவியோ மேல் நோக்கிச் செல்ல முடியாது.
தகவல் சுரங்கம்
உலக தொண்டு நிறுவன தினம்
அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையில், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 89 நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் தொண்டு
நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இது தவிர போர் பாதிப்பு, தொற்றுநோய் காலங்களில் இதன் பணி மகத்தானது. உலகளவில் 1 கோடி என்.ஜி.ஓ., க்களும், இந்தியாவில் 30 லட்சம் என்.ஜி.ஓ., க்களும் செயல்படுகின்றன.

