PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
திறந்தது விண்கல்
அமெரிக்காவின் 'நாசா' 1999 செப். 11ல் '101955 பென்னு' விண்கல்லை கண்டுபிடித்தது. விட்டம் 1610 அடி. இது 2182ல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் இந்த விண்கல் பாறை, மண் மாதிரியை ஆய்வு செய்ய 2018ல் நாசா' அனுப்பிய 'ஆசிரிஸ்-ரெக்ஸ்' விண்கலம் 2020ல் 'பென்னு' விண்கல்லில் தரையிறங்கியது. மண், பாறை மாதிரி அடங்கிய கேப்சூலை எடுத்துக்கொண்டு 2023 செப்டம்பரில் பூமியை வந்தடைந்தது. மூன்று மாத முயற்சிக்குப்பின் சமீபத்தில் இந்த கேப்சூலை திறந்து மாதிரியை ஆய்வுக்கு எடுத்தனர்.
தகவல் சுரங்கம்
நீளமான நீரிணை
நீரிணை என்பது இரு பெரிய நிலப்பரப்புக்கு இடையே செல்லும் நீர்வழித்தடம். மலேசியாவின் மலாய் தீபகற்பம் -- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு இடையே உள்ள 'மலாகா நீரிணை' உலகில் நீளமானது. இதன் நீளம் 930 கி.மீ. அகலம் ௩8 கி.மீ. சராசரி ஆழம் 82 அடி. இந்திய பெருங்கடல் - -பசிபிக் பெருங்கடல் இடையிலான கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உலகளவில் சூயஸ், பனாமா கால்வாய்க்கு இணையாக முக்கிய கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுக்கு 70,000 கப்பல்கள் இதனை கடந்து செல்கின்றன.

