PUBLISHED ON : ஜன 24, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
காதை மூடினால் சத்தம் ஏன்
காதுக்கு அருகில் ஒரு டம்ளரை வைத்தால் 'கொய்ங்' என்ற சத்தம் வருவதுண்டு. இதற்குக் காரணம் 'ரெசோனேடிங்' எனும் உடனிசைவு அமைப்புதான். டம்ளர் அல்லது சங்கு போன்ற பொருட்களில் புகும் ஒலி, மங்கிக் குறைவது வரை அங்கும் இங்கும் பட்டுத் தெறித்து எதிரொலித்தபடி இருக்கும். வெளிப்புற ஓசை, இடுக்கு வழியாக உள்ளே கசிந்து உடனிசைவு நிகழ்வதுதான் 'கொய்ங்' என்ற சத்தம். டம்ளர் கூடத் தேவையில்லை, வெறும் கையைக் குவித்து காதின் மீது வைத்து மறைத்து பார்த்தாலும் இதுபோல சத்தம் கேட்கும்.
தகவல் சுரங்கம்
தேசிய பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் இளம் தலைமுறை பெற்றோர்களால் தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது.

