PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

ஆந்திர மாநில காங்., தலைவர் ஷர்மிளா: என் சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அதற்கு முந்தைய தெலுங்கு தேசத்தின் 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த இரு ஆட்சிகளும், ஆந்திராவை 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளியுள்ளன. தற்போது, ஜெகன் ஆட்சியில் சாலை அமைப்பதற்கு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதியில்லை.
டவுட் தனபாலு: மாநில காங்., தலைவரா பொறுப்பேற்ற கையுடன், அண்ணனுக்கு எதிரா அரசியலை ஆரம்பிச்சுட்டீங்க போல... இப்படி, ஒரே குடும்பத்துல இருக்கிறவங்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் கட்சி, இந்தியாவுலயே காங்கிரசாகத்தான் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் நல்லாட்சி நடந்தால் மட்டும் தான் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் கண்ணீர் தான் வரும். தி.மு.க., அரசைப் பொறுத்த வரை சாதனைகளை விட வேதனைகளே அதிகம். தி.மு.க., ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால், விரைவில் தி.மு.க., ஆட்சி மாறும். மக்கள் அதற்கு தயாராகி விட்டனர்.
டவுட் தனபாலு: ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான நீங்க தயாரா இருக்கீங்களா...? ஆட்சியின் தோல்விகளை சுட்டிக்காட்டி மக்கள் மன்றத்துல அரசியல் பண்ணாம, இருக்கிற இடம் தெரியாம இருந்தீங்க என்றால், உங்க எண்ணம் ஈடேறுவது, 'டவுட்'தான்!
த.மா.கா. தலைவர் வாசன்: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தாலும், விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் விஷயத்தில் எங்களுக்கு எவ்வித பாகுபாடும் கிடையாது என்பதை, தமிழகத்தில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகை தந்தது, அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவருடைய மனதில், மாற்றாந்தாய் மனப்பான்மை எப்போதும் இருந்ததில்லை.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஒட்டுமொத்த இந்தியாவையும், பிரதமர் மோடி சமமாகவே பாவிக்கிறார்... இங்க இருக்கிற திராவிடல் மாடல் ஆட்சியாளர்கள் தான், மோடியை ஏதோ அந்நிய தேசத்தவர் போல பார்க்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

