PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: நான் புதுச்சேரியில் முக்கியமான பொறுப்பை விட்டுவிட்டு, தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். ஆனால், என்னை புதுச்சேரியில் இருக்கிறேனா எனக் கேட்கும் அமைச்சர் சேகர் பாபுவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என தெரியாதா. நான், என்னை வளர்த்த கட்சியை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு சென்று, அம்மா வளர்த்தார் என்பதற்கு பதில் அண்ணாதுரை வளர்த்தார் என்று சொல்ல மாட்டேன்.
டவுட் தனபாலு: சேகர்பாபு ஒருகாலத்தில் அ.தி.மு.க.,வில் இருந்தவர் என்பதை நீங்க குத்திக் காட்டுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... ஆனா, இன்று தி.மு.க.,வில் பாரம்பரியமாக இருக்கும் சீனியர்களை விட, முதல்வரின் மனதில் முக்கிய இடம் பிடித்தவர் சேகர்பாபு தான் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: 'டாஸ்மாக்' தொடர்பான அமலாக்கத் துறை வழக்கை நேர்மையாக எதிர்கொள்ளத் துணிவின்றி, கோர்ட் வாயிலாக தடை பெற்றுள்ளனர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஜனநாயக முறைப்படி நடக்கின்றனர். அது, தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது. இதே, முன்னாள் பிரதமர் இந்திரா இப்போது இருந்திருந்தால், பிரிவினைவாதம் பேசும் தி.மு.க.,வினரை முட்டிக்கு முட்டி தட்டி, சிறையில் அடைத்திருப்பார். மீண்டும், 'மிசா' சட்டம் பாய்ந்திருக்கும்.
டவுட் தனபாலு: இந்திரா, 'மிசா' சட்டத்தை பயன்படுத்தியதால் தான், பல மாநிலங்கள்ல காங்., கட்சி தேய்ந்து, மாநில கட்சிகள் உருவாகி வளர்ந்தன... அதனால, நீங்க சொல்ற மாதிரி, இந்திரா இப்ப உயிருடன் இருந்திருந்தாலும், அந்த சட்டத்தை பயன்படுத்தி இருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கோவை, மருதமலையில் உள்ள முருகன் கோவிலில், தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்த, நாம் தமிழர் கட்சியினரை கைது செய்தது கண்டனத்துக்குரியது. தமிழ்மொழியை காக்க, ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க., அரசு, சமஸ்கிருத வழிபாட்டை வலிந்து செய்வது ஏன்?
டவுட் தனபாலு: ஹிந்தியை தான் எதிர்க்கிறாங்களே தவிர, தமிழ்மொழியைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுத்த மாதிரி தெரியலையே... இன்றைக்கு ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அரை குறையாக இருப்பதே இதற்கு சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!