PUBLISHED ON : ஜூன் 23, 2025 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: முன்னாள் முதல்வர் பழனிசாமி, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். ஒரு மாதத்துக்கு முன் வழங்கியிருந்தால், சட்ட சிக்கல் வந்திருக்காது. 'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை' என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும், முதல்வர் ஸ்டாலின் இன்னும் தரவில்லை.
டவுட் தனபாலு: 'குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதால தான், மற்ற சமூகத்தினர் ஓட்டுகள் கிடைக்காம, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்பட்டது'ன்னு சொல்றாங்க... அதனால, மறுபடியும் பழனிசாமியே முதல்வர் ஆனாலும், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தருவாரா என்பது, 'டவுட்' தான்!
தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., 'நெல்லிக்குப்பம்' புகழேந்தி: எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், 'டாஸ்மாக்' கடையை, 24 மணி நேரமும் திறந்து வைப்பேன். குடிக்கிறவர்கள் தான், டாஸ்மாக்கிற்கு குடிக்க போவர். இனி, யாராலும் அவர்களை திருத்த முடியாது. அவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு. எதற்காக இதை கூறுகிறேன் என்றால், குடிக்கிறவர்கள் நாட்டுக்கு தேவையில்லை; 24 மணி நேரமும் குடித்துவிட்டு சாகட்டும். மற்றவர்களை வைத்து ஆட்சி நடத்திக் கொள்ளலாம்.
டவுட் தனபாலு: இப்ப மட்டும், 24 மணி நேரமும், 'சரக்கு' கிடைக்காத மாதிரி பேசுறாரே... அப்பாவி ஏழைகள், 150 ரூபாய்க்கு குவார்ட்டர் வாங்கி குடிக்கிற காசுல தான், அரசாங்க கஜானாவும் நிரம்புது... இவரது கட்சி முக்கிய தலைவர்களின் வீட்டு பண பெட்டியும் நிரம்புது என்ற உண்மையை மறந்துட்டு பேசுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும். அப்படியான சமூகத்தின் உருவாக்கம் வெகுதொலைவில் இல்லை. மொழிகளை நம் கலாசாரத்தின் மீதான ஆபரணங்களாக கருதுகிறேன். நம் மொழிகள் இன்றி, உண்மையான இந்தியராக நாம் இருக்க முடியாது. தாய் மொழியே, நம் நாட்டின் அடையாளம்.
டவுட் தனபாலு: தாய் மொழியே நாட்டின் அடையாளம் என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், 'உலகத்துக்கே விஸ்வகுருவா இந்தியா இருக்கணும்'னு அடிக்கடி சொல்வீங்களே... ஆங்கிலத்தை தவிர்த்துட்டு, உலக நாடுகளை எந்த மொழியில் தொடர்பு கொள்ள முடியும் என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் விளக்கம் இருக்கா?