PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி: அ.தி.மு.க., வலுவான அரசியல் கட்சி; அதை யாராலும் அசைக்க முடியாது. தற்போது கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக வைக்கப்படும் பிரசாரம் எல்லாம் தவறான பிரசாரம். 'பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும்' என, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். முதலில் பிரிந்து சென்ற நான்கு பேரும் ஒன்றிணையட்டும்; அதன்பின், மற்றதை பேசலாம்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன்னு நாலு பேரும் நாலு திசையாக அல்லவா நிற்கிறாங்க... நீங்க சொல்ற மாதிரி, அவங்க நாலு பேரும் சேர்ந்தாலும், அதுல யாருக்கு தலைமை பதவி என்பதில் மோதல் வந்துடுமோன்னு தான் சேராமலேயே இருக்காங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: நடிகர் விஜய், 24 மணி நேரமும் அரசியல் தலைவராக இருக்க வேண்டும் என, தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். த.வெ.க., ஒரு சீரியசான கட்சி என்றால், 24 மணி நேரமும் மக்கள் பணி செய்ய வேண்டும். 'சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன்; வார நாட்களில் பார்க்க மாட்டேன்' என்பது, புதிதாக வந்திருக்கக்கூடிய அரசியல் கட்சிக்கு அழகல்ல.
டவுட் தனபாலு: அதானே... ஒரு படத்துல நடிக்கிறதுக்கு, வருஷத்துல, 60 நாட்கள் மட்டும், 'கால்ஷீட்' கொடுக்கிற மாதிரி, வாரத்துல ரெண்டு நாள் தான் மக்களை சந்திப்பேன்னா என்ன அர்த்தம்... தப்பி தவறி விஜய் எல்லாம் முதல்வராகிட்டா, 'வாரத்துல ரெண்டு நாள் தான் கோட்டைக்கு வருவேன்'னு சொன்னாலும் சொல்லுவாரோ என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., கட்டுக்கோப்பாக உள்ளது. சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போதுகூட செங்கோட்டையனை சந்தித்தது பற்றி, என்னிடம் எதுவும் சொல்லவில்லை; அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. மற்ற கட்சிகள் செயல்படுவது பற்றி எங்களுக்கு தெரியாது. வெளியில் சென்றவர்கள் பற்றி கருத்து கூற முடியாது.
டவுட் தனபாலு: உங்க கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த செங்கோட்டையன், அமித் ஷாவிடம் அது பற்றிதான் பேசியிருப்பார்... அதை, அமித் ஷா எப்படி உங்களிடம் சொல்லுவாரு... அரசியல் சாணக்கியரான அமித் ஷாவின் ஆட்டங்கள் போக போகத்தான் உங்களுக்கு புரிய வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!