PUBLISHED ON : ஜூன் 08, 2026 12:00 AM

அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன்: எம்.ஜி.ஆர்., 1977ல் முதல்வரானது முதல், 1987ல் மறையும் வரை, கே.பி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை தனிப்பட்ட பாதுகாவலர்களாக வைத்திருந்தார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இவர்களில் ஒருவர் அவரது அருகில் இருப்பார் என்பது, அ.தி.மு.க., வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். அமைச்சராக உள்ள ஒருவர், தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்புக்கு வெளியாட்களை நியமித்துக் கொள்ள அரசு விதிகள் அனுமதிக்கின்றன.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... போலீசார் எல்லாம், பதவி இருந்தால் தான் பாதுகாப்புக்கு கூடவே வருவாங்க... பதவி போன மறு விநாடியே பறந்துடுவாங்க... ஆனா, தனிப்பட்ட பாதுகாவலர்கள் தான், தங்களது உயிரை கொடுத்தாவது, தங்கள் தலைவர்களை பாதுகாப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: அடுத்த மாதம் நடைமுறைக்கு வர உள்ள 125 நாள் வேலை திட்டத்திற்காக, தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை, 3,923 கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்திருப்பது மிகப்பெரும் அநீதி. ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டமாக இருந்தபோது, 2023 -- 24ல், தமிழகத்திற்கு, 12,136 கோடி, 2024 - -25ம் ஆண்டில், 7,588 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது ஒதுக்கப்படும் நிதியில், ஆண்டுக்கு 12 நாட்கள் கூ ட வேலை வழங்க முடியாது.
டவுட் தனபாலு: நீங்க, இப்ப வரைக்கும் தே.ஜ., கூட்டணியில் தான் இருக்கீங்க... திடீர்னு, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக முழங்க ஆரம்பிச்சிருக்கீங்களே... மத்திய அமைச்சர் பதவி தராத ஆதங்கமோ என்ற, 'டவுட்'தான் வருது!
இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: முதல்வர் விஜய், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்பது இயல்பு தான். அவர்களுக்கு கட்டமைப்பு, அதிகாரம் என்பதெல்லாம் புதிதாக இருக்கும். அதனால், அவகாசம் தேவை தான். ஆனால், சட்டம் - ஒழுங்கை சீர் செய்வதில் ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் விஷயத்தில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை துவக்க விழாவை, ரெண்டு முறை தள்ளிவச்சவங்க, அடுத்து எப்ப நடக்கும்னு அறிவிக்கவே இல்லை... சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டுக்கு வரும் வரை, பெண்கள், குழந்தைகளை யார் பாதுகாப்பாங்க என்ற, 'டவுட்' வருதே!





