PUBLISHED ON : செப் 01, 2026 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும் திகழும் ஜல்லிக்கட்டை, 'இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு' என, சோழவந்தான் த.வெ.க., - எம்.எல்.ஏ., கருப்பையா பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்து செல்லும் சாராய கடைகளை மூடச்சொல்ல, உங்களுக்கு துணிவு இருக்கிறதா?
டவுட் தனபாலு:
வீரத்தின் வெளிப்பாடு ஜல்லிக்கட்டு என்பதில், 'டவுட்'டே இல்லை... அதேநேரம், பனை மரத்துல ஏணி வச்சு ஏறி கள் இறக்கியது, கடலுக்குள்ள போய் மாநாடு நடத்தியதுன்னு பல வித்தைகள் காட்டிய நீங்க, ஜல்லிக்கட்டிலும் களமிறங்கி காளையை அடக்கிட்டு, ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கினா என்ன என்ற, 'டவுட்' வருதே!
----
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:
முஸ்லிம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க, த.வெ.க., அரசு, 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பிற வழிபாட்டு தலங்களை சீரமைக்க, அரசு நிதி உதவி வழங்குகிறது. ஆனால், ஹிந்து கோவில் சொத்துக்களை கையாளும் அரசு, கோவில் வளர்ச்சிக்கு கூட நிதி தருவதில்லை. ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கோவில்களை சீரமைக்க, அரசு பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்க வேண்டும்.
டவுட் தனபாலு:
ஹிந்து கோவில்களுக்கு நிதி தராம போனாலும் கூட பரவாயில்லை... கடந்த தி.மு.க., ஆட்சியில் செய்தது போல, கோவில் உண்டியல் பணத்தை எடுத்து, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள் கட்டுறதுன்னு, மற்ற துறைகள் செய்ய வேண்டிய பணிகளை நிறுத்தினாலே, த.வெ.க., அரசை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!
----
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்:
தெலுங்கானாவில், எஸ்.ஐ.ஆர்., பணியின் போது, 92 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, அம்மாநில காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளது மிக தீவிரமான பிரச்னை; அவரது கவலைகள் உண்மையானவை. இந்த விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு:
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க... அங்க எல்லாம் பா.ஜ., எந்த எதிர்ப்பும் தெரிவிக்கலையே... காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டும் தான், எஸ்.ஐ.ஆர்., பணிகளை எதிர்க்கின்றன... இதுல இருந்தே நீக்கப்பட்டவங்க எல்லாரும், உங்களுக்கு சாதகமான போலி வாக்காளர்கள் தான் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
