/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆன்மிக தலமாக அவிநாசி; கட்டமைப்புகள் வலுப்படுமா?
/
ஆன்மிக தலமாக அவிநாசி; கட்டமைப்புகள் வலுப்படுமா?
UPDATED : பிப் 02, 2024 11:10 AM
ADDED : பிப் 02, 2024 12:26 AM

திருப்பூர்:ஆன்மிக தலமான அவிநாசியில், அடிப்படைக்கட்டமைப்பு வசதி அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகளவில், சுற்றுலா தலங்கள் நிறைந்த, பல்வேறு பாரம்பரியம், கலாசாரம் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கென, தனியிடம் உண்டு.
இந்திய சுற்றுலாவை பொறுத்தவரை, 60 சதவீதம், ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த சுற்றுலா தொடர்புடையது என்கிறது, ஒரு புள்ளிவிபரம்.சுற்றுலா அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப்படி, அனைத்து மத சுற்றுலா தலங்களின் வாயிலாக, கடந்த, 2021ல் ஈட்டப்பட்ட வருமானம், 65 ஆயிரத்து 070 கோடி; இது, 2022ல், ஒரு கோடியே 34 ஆயிரத்து 543 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
அதுவும், கொரோனா என்ற கொடிய அரக்கனின் கோர தாண்டவத்துக்கு பின், ஆன்மிகம் மீதான பற்றுதல் மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது என்கின்றனர், ஆன்மிகவாதிகள்.கடந்தாண்டு சுற்றுலா பயணிகளின் பயண கணிப்புபடி, கிட்டதட்ட, 70 சதவீதம் இந்திய சுற்றுலா பயணிகள், தியானம் உள்ளிட்ட மன அமைதியை தேடி, ஆன்மிக சுற்றுலா தலங்களில் தங்கிச்செல்வதை விரும்புகின்றனர் என தெரிய வந்திருக்கிறது.
அந்த வகையில், ஆன்மிக வரலாற்றில், அழியா இடம் பிடித்திருக்கிற, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.விசேஷ நாட்கள், விழா நாட்கள் தவிர்த்து, அவிநாசி கோவிலுக்கு வந்து செல்லும் மக்களில், 80 சதவீதம் பேர் வெளியூர் மக்கள்தான்.
கோவை - சேலம் நெடுஞ்சாலையின் இடையில் இக்கோவில் அமைந்துள்ளது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக அவிநாசி உள்ள நிலையில், அதிகளவிலான வெளியூர் மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
கட்டமைப்பு பலப்பட வேண்டும் ஆனால், பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா வந்து செல்வோர் தங்கிச் செல்வதற்கான விடுதி வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் அவிநாசியில் இல்லை. விழா நாட்களில் லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, சாலை வசதிகள் கூட இங்கில்லை.
சுற்றுப்புற சுகாதாரம் கூட, திருப்திகரமானதாக இல்லை. கட்டமைப்புகளை மேம்படுத்த முட்டுக்கட்டையாக இருக்கிற, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை மட்டுமின்றி, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து, ஆன்மிக சுற்றுலா சார்ந்த திட்டமிடலை வகுக்க முயற்சித்தால், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அகிலம் போற்றும் நிலைக்கு உயரும். ஆன்மிகம் சார்ந்த வர்த்தக வாய்ப்பு கிடைக்கும்;அவிநாசியின் பொருளாதாரம் உயரும்.
பக்தர்களை ஈர்க்கும் ஆற்றல்!
ஆண்டு தோறும், மார்கழி சொற்பொழிவுக்காக, அவிநாசி வரும் ஆன்மிக பேச்சாளர் திருச்சி கல்யாணராமன் கூறுகையில், ''ஆன்மிக சுற்றுலா தலமாக, ஏராளமான பக்தர்களை ஈர்க்கும் ஆற்றல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு உண்டு; அத்தகைய நிலை விரைவில் வரும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

