/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
/
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
ADDED : செப் 25, 2025 11:40 PM

பந்தலுார்; நீலகிரி மாவட்டத்தில் வாழும் குரும்பர் பழங்குடிகளில் முதன் முதலாக ஒரு மாணவி வக்கீலாக தடம் பதித்து பெருமை சேர்த்துள்ளார்.
நீலகிரியில் வாழும் குரும்பர் பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினரான, பெட்ட குரும்பா சமுதாயத்தை சேர்ந்த, கின்மாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக தடம் பதித்துள்ளார். இவர் மசினகுடி பொக்காபுரம் அருகே குரும்பர் பாடி பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாறன்--மஞ்சுளா தம்பதியின் மகள்.
இவர், 8-ம் வகுப்பு வரை பொக்காபுரம் அரசு பழங்குடியினர் பள்ளியிலும், உயர்நிலை படிப்பை கார்குடி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பை, கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியிலும் நிறைவு செய்தார். தொடர்ந்து, கார்குடி பள்ளி ஆசிரியர் மாரிமுத்து ஆலோசனையுடன், சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பி.ஏ., எல்.எல்.பி. படித்து தற்போது 'ஹானஸ்' பட்டத்தை பெற்றுள்ளார்.
வக்கீல் கின்மாரி கூறுகையில், ''எனது சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக படித்தே ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன், ஆசிரியர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், படிப்பை நிறைவு செய்தேன். வக்கீலாக உயர் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடி மக்களின் சிறுவயது திருமணங்களை முழுமையாக தடுத்து, கல்வி பயில வைக்கப்பது எனது லட்சியமாக உள்ளது,'' என்றார்.-