Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நம்பிக்கை திரும்பும்!

 நம்பிக்கை திரும்பும்!

 நம்பிக்கை திரும்பும்!

1


PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில் எந்த துறையில் ஊழல் நிகழ்ந்தாலும் அதை சகித்துக் கொள்ளலாம்; ஆனால், நீதித்துறையில் ஊழல் என்பதை, ஒரு சதவீதம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனாலும், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் முதல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வரை பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுகிறது.

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கினால், அவர்கள் உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்படும் நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் நிரூபணமானால், அதிகபட்சமாக, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்.

அதுவே, உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் வரும் போது, அவர்களை விசாரணை செய்து, 'சஸ்பெண்ட்' செய்வது எளிதல்ல.

ஏனெனில், ஆட்சியாளர்களின் அழுத்தத்துக்கு உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு, சட்ட பாதுகாப்பு அளித்துள்ளது.

அதேநேரத்தில், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போது, சட்டப் பிரிவு 3(2)-ன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவால் விசாரணை நடத்தப்பட்டு, பதவி நீக்கத்துக்கு பரிந்துரைக்கப்படுவர்.

அதன்மீது ராஜ்யசபா என்றால், 50 உறுப்பினர்கள், லோக்சபா என்றால், 100 உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினால் தான், பதவி நீக்க தீர்மானமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அவை விசாரணையில் இருக்கும் போதோ அல்லது பார்லிமென்டில் ஒப்புதல் கிடைக்காமலோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தோ, 'பதவி நீக்கம்' என்ற அவமானத்தில் இருந்து தப்பித்து வந்துள்ளனர்.

அவ்வகையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தற்போது தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2025 மார்ச் 14-ஆம் தேதி அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது, நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நீதிபதிகளின் கண்ணியம் குறித்து மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியது, இந்நிகழ்வு!

இப்பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, வர்மாவால் சரியான விளக்கம் கூற முடியவில்லை.

அதனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மூவர் கொண்ட குழுவை நியமித்து, விசாரணை செய்ய உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் தான், தன்னை சஸ்பெண்ட் செய்ய எப்படியும் பார்லிமென்ட்டில் ஒப்புதல் வழங்கி விடுவர் என்பதை அறிந்து, ராஜினாமா செய்துள்ளார், வர்மா.

இது அவருக்கு தற்காலிக தீர்வு தானே தவிர, நிரந்தர தீர்வு அல்ல; ஏனெனில், இனி, ஊழல் ஒழிப்புத்துறை சட்ட ரீதியாக விசாரணை செய்து, அவரை கைது செய்யவும் முடியும்.

அவ்வகையில், வர்மா தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் இனி எந்தவொரு நீதிபதியும் ஊழல் செய்ய அஞ்சுவர்; நீதிபதிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் திரும்பும்!

எது ஒரிஜினல்?


ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்றைய காங்கிரசார், தங்களை நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட இயக்கத்தில் இருந்து வந்ததாக, மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.

உண்மையில் இன்றைய காங்., கட்சிக்கும், சுதந்திர போரில் பங்கு பெற்ற காங்கிரசுக்கும் சம்பந்தமே இல்லை.

இந்திய அரசியல் வரலாற்றில், 1969- என்பது, ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என்றே கூறலாம்!

கடந்த 1885-ல் துவங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், கொள்கை மற்றும் அதிகார ரீதியாக இரண்டாக உடைந்தது, 1969ல் தான்!

முன்னாள் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின், கட்சி மேலிடத்தில் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ்.நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டில் போன்ற மூத்த தலைவர்கள் அடங்கிய வலிமையான, 'சிண்டிகேட்' குழு இருந்தது. இக்குழுவினர், நேருவின் மகளான இந்திராவை பிரதமராக்கினால், அவர் தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார் என்று நம்பி, அவரை முன்னிறுத்தியது.

ஆனால், பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே, 'அசுர வேகத்தில்' தன்னிச்சையான முடிவுகளை எடுக்கத் துவங்கினார், இந்திரா.

காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் நிதானமான போக்கை விரும்பினர். ஆனால், தான் ஒரு முற்போக்காளர் என்பதைக் காட்ட, 14 தனியார் வங்கிகளை, தேசிய மயமாக்குதல் மற்றும் மன்னர் மானியத்தை ஒழித்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார், இந்திரா.

இது மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த காங்., தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அப்போது நிதியமைச்சராக இருந்த மொரார்ஜியிடமிருந்து அவரது பதவியை பறித்து, அவரை அவமானப்படுத்தினார், இந்திரா.

அதன்பின், காங்., கட்சிக்கும், இந்திராவுக்கும் இடையிலான மோதல் மெல்ல அதிகரித்து, 1969ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் உச்சகட்டத்தை எட்டியது.

காங்., தலைமை, பார்லிமென்ட் சபாநாயகராக பதவி வகித்த, நீலம் சஞ்சீவ ரெட்டியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது.

பிரதமர் என்ற முறையில், அப்போது சஞ்சீவ ரெட்டியை ஆதரித்து முன்மொழிந்து இந்திரா கையெழுத்திட்டாலும், ஓட்டு போடுவதற்கு சில நாட்களுக்கு முன், அப்படியே, 'பல்டி' அடித்து, காங்., வேட்பாளருக்குப் பதிலாக, சுயேச்சை வேட்பாளரான வி.வி.கிரியை ஆதரிக்கும்படி மறைமுகமாகத் துாண்டி, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார், இந்திரா.

கிரி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சி ஒழுக்கத்தை மீறியதாகக் கூறி, அப்போதைய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா, பிரதமர் இந்திராவை கட்சியிலிருந்து நீக்கினார்.

அதன்பின், காமராஜர், நிஜலிங்கப்பா தலைமையில் பழைய காங்கிரசும், இந்திரா தலை மையில், பிளவுபட்ட புதிய காங்கிரசும் உருவானது.

இன்று நாம் காணும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்., கட்சி போன்று தான் அன்று, இந்திராவின் காங்., கட்சியும் உருவானது.

இன்றைய காங்., கட்சி மகாத்மா காந்தியின் நேரடி வாரிசாக தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில், தொழில்நுட்ப ரீதியாக, 1969-ல் பிறந்த காங்கிரசின் ஒரு கிளை அமைப்பே தவிர, 1885-ல் துவங்கப்பட்ட, 'ஒரிஜினல்' காங்கிரஸ் அல்ல!

அவ்வகையில், இன்றைய காங்கிரசும், நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட காங்கிரசுக்கும் துளியும் சம்பந்தமில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us