/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
/
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

எஸ்.பார்த்தசாரதி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒவ்வொரு முறையும் வெளிநாட்டு பயணம் முடித்து வரும்போதும், அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என, முதல்வர் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே கூறுகிறார். முதல்வர் மனதை தொட்டு சொல்லட்டும்... அது, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா?' என்று கேட்டுள்ளார், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்.
'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு ஐம்பது பைசா என்றா னாம் ஒருவன்!' அதுபோல், விஜயின் குற்றச் சாட்டிற்கு பதில் தராமல், 'தி.மு.க.,விற்கு கூடுவது கொள்கைக்கான கூட்டம்; மற்றவர்களுக்கு கூடுவது காக்கா கூட்டம்' என்கிறார், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி.
அதுசரி... தி.மு.க.,வின் கொள்கை தான் என்ன?
உட்கார போடப்பட்டிருக்கும் நாற்காலி களை லவட்டிக் கொண்டு போவதும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் வாழைக்குலைகளை அறுத்துக் கொண்டு செல்வதும் தான் கழகத்தின் கொள்கையா?
இக்கொள்கையை கடைப்பிடிப்பதற்கு தான் குவாட்டர், கோழி பிரியாணியோடு பணமும் தருகின்றனரோ!
கட்சி ஆரம்பித்து அரை நுாற்றாண்டிற்கும் மேல் ஆகி விட்டது. ஆனாலும், இன்று வரை ஒரு தேர்தலில் தனித்து நின்று, தங்களை நிரூபிக்க தைரியம் இல்லை.
இதில், என்னமோ பெரிதாக, 'மயிர் நீத்தால் உயிர் நீக்கும் கவுரி மான்கள்' போல், கொள்கை கொத்தவரங்காய் என்று வெற்றுப் பேச்சு!
அப்படி தி.மு.க.,விற்கு ஆழமான கொள்கை பிடிப்பு இருக்கிறது என்றால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் தனித்து நின்று காட்டுங்களேன்... தமிழக மக்கள் எவ்வளவு பேர், தி.மு.க.,வின் கொள்கைக்கு ஓட்டு போடுகின்றனர் என்று தெரிந்துவிடும் அல்லவா?
****************************
கட்சிக்கு கொள்கை வேண்டாமா?
ஏ.சி.ராஜன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், 234 தொகுதிகளிலும்
வெற்றி பெற்று, ஆட்சி அதிகாரமே தன் கையில் வந்து விட்டது போன்று அறிக்கை
விட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் பங்கேற்ற கூட்டங்களில், கட்சி
துவங் கப்பட்டதற்கான காரணம் என்ன, கொள்கை என்ன, ஆட்சிக்கு வந்தால் தான்
கொண்டு வரப்போகும் மக்கள்நல திட்டங்கள் என்ன என்பதற்கான எந்த விளக்கங்களும்
இல்லை.
ஆனால், 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று
கொக்கரிக்கிறார். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து
காணாமல் போய்விட்டதை பாவம் விஜய் அறியவில்லை போலும்!
நடிகர்
சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, தமிழக முன்னேற்ற
முன்னணி என்ற கட்சியை துவங்கினார். காலையில் உதித்த சூரியன், மாலையில்
மறைந்து போவது போல், கட்சி துவங்கிய வேகத்தில் மறைந்தும் போனது.
அதேபோலத் தான் நடிகர் சரத்குமார் கட்சி துவங்கி, கடைசியில் பா.ஜ.,வுடன்
கட்சியை இணைத்து விட்டு சென்று விட்டார். நடிகர் விஜயகாந்த் கட்சி துவங்கி,
முதல் தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்று, இரண்டா வது தேர்தலில்
எதிர்க்கட்சித் தலைவர் என்று அந்தஸ்துக்கு உயர்ந்தாலும், கடைசியில்
அவராலும் கட்சியை முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை.
இப்படி
எத்தனையோ நடிகர்கள் கட்சிகளை துவக்கினாலும் அவர்களால் நிலைத்துநிற்க முடிய
வில்லை. காரணம், அவர்கள் தங்களுக்கு கிடைத்த சினிமா புகழை வைத்தும்,
ரசிகர்களை வைத்தும், அதிகாரத்திற்கு வரத் துடித்தனரே தவிர, உயர்ந்த
லட்சியத்தில் கட்சி ஆரம்பிக்கவில்லை.
த.வெ.க., தலைவர் நடிகர்
விஜயும் அந்த வகையைச் சேர்ந்தவர் தான். அவருக்கென்று கொள்கை, கோட்பாடு
இல்லை; தமிழகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் என்னவென்று
சொல்லத் தெரியவில்லை. ஆனால், முதல்வராக துடிக்கிறார்.
மேடைகளில் கட்சி கொள்கைகள் குறித்து பேசாமல், 'நம் ஒரே எதிரி தி.மு.க.,' என்கிறார்.
இதுவா விஜயின் கொள்கை?
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வருவோம்,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம், இலவசங்களை ஒழிப்போம்' என்று
கூறினால், ஏதோ தமிழகத்திற்கு நல்லது செய்ய கட்சி ஆரம்பித்துள்ளார் என்று
எடுத்துக் கொள்ளலாம்.
அதை விடுத்து, 'தி.மு.க., எதிரி; பா.ஜ., கொள்கை எதிரி' என்று பிதற்றுவதற்கு ஒரு கட்சியா?
தி.மு.க., எதிரி என்றால், எவ்வகையில்? பா.ஜ., கொள்கை எதிரி என்றால், விஜயின் கொள்கை என்ன?
பேசும் பேச்சிற்கு ஓர் அர்த்தம் வேண்டாமா? கட்சி என்று இருந்தால் அதற்கென்று ஒரு கொள்கை வேண்டாமா?
விஜய் என்பதற்கு வெற்றி என்று பொருள் உண்டு. அவ்வகையில், நடிகர் விஜயின்
தமிழக வெற்றிக் கழகம், தமிழக விஜய் ரசிகர் மன்ற கழகமே தவிர, அது தமிழக
மக்களின் வாழ்வில் வெற்றியை, மகிழ்ச்சியை கொண்டு வரும் கழகம் அல்ல!
ஓட்டுபோட தெரியாத எம்.பி.,க்கள்! கே.சேது, ராமநாதபுரத்தில் இருந்து
எழுதுகிறார்: சமீபத்தில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பார்லி மென்ட்
உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இதில், செல்லாத ஓட்டுகள், 15!
இத்தனைக்கும் எப்படி ஓட்டளிக்க வேண்டும் என, எல்.கே.ஜி., படிக்கும்
குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போன்று வகுப்பு நடத்தினர்.
அப்படியிருந்தும், தவறாக ஓட்டுப் போட்டுள்ளனர் என்றால்,
பார்லிமென்ட்டிற்கு எப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளோம்
என்று பாருங்கள்!
எவ்வளவோ மேதை களும், பொருளாதார நிபுணர் களும்
இருந்த சபையில், இப்படி ஓட்டுபோடக் கூட தெரியாதவர்களை தேர்ந்தெடுத்து
அனுப்பியவர்கள் அல்லவா முழு மூடர்கள்!
தேர்தலின் போது நாம் ஓட்டு
போடும் நபர் திறமை யானவரா, நல்லவரா, நாட்டுப் பற்று மிகுந்தவரா எனப்
பார்க்காமல், 'நோட்டு'க்கு ஓட்டை விற்ற தால் வந்த விளைவு இது!
திறமைக்கும், நேர்மைக்கும் ஓட்டு போடுவதற்கு பதில், கொலைகாரனாக
இருந்தாலும், கொள்ளைக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை; நமக்கு நோட்டு
தந்தால் போதும் என்ற மன நிலையில் பணத்திற்காக ஓட்டை விற்றால், வேறு என்ன
நடக்கும்?
இதுபோன்று ஓட்டு போடக் கூட தெரியாத கூட்டம் ஒன்று
பார்லிமென்ட் சென்று, அங்குள்ள கேன்டீனில் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு,
எம்.பி.,க்குரிய சகல சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு, மேற்கொண்டு
ஏதும் சுரண்ட முடியுமா எனப் பார்ப்பர்.
இந்த அவலங்கள் எல்லாம் தீர
வேண்டுமானால் தகுதி, திறமை, நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், நோட்டுக்கு ஓட்டை விற்போர் இருக்கும் வரை அது நடக்குமா என்பது
கேள்விக் குறிதான்!