PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறவர் மகாசபை ஆண்டு விழா சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'டீ கடை வைத்திருந்த சாதாரண தொண்டனான நான், ஜெயலலிதா கொடுத்த முதல்வர் பதவியை அவரிடமே திருப்பிக் கொடுத்ததுதான் என் வரலாறு...' என்று பேசியுள்ளார்.
வார்த்தை அலங்காரத்துக்கு வேண்டுமானால் அவரது பேச்சு அழகாக இருக்கலாம்; ஆனால் பன்னீர்செல்வம் சொல்வது வரலாறு அல்ல; அது ஒரு சம்பவம்!
ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பாஸ்கர ராவ், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களை தனக்கு ஆதரவாக ஒன்று திரட்டி, ராமராவை பதவி நீக்கம் செய்து, முதல்வராக அவர் பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வராக அமெரிக்கா சென்ற ராமராவ், முன்னாள் முதல்வராக ஆந்திராவுக்கு திரும்பினார்.
பாஸ்கர ராவை போல் பன்னீர்செல்வத்திற்கு பெரும்பான்மை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருந்ததா என்ன... முதல்வர் பதவி மீது ஆசைப்படாமல், அதை திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொல்ல!
பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்திருந்ததால், இந்நேரம், அ.தி.மு.க., அவர் கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கும். உரிமையை மீட்க குழு அமைக்க வேண்டிய அவசியமோ, தர்ம யுத்தமோ தேவைப்பட்டிருக்காது!
சரி... பாஸ்கர ராவுக்கு இருந்த துணிச்சலும், தைரியமும் பன்னீர்செல்வத்துக்கு இருந்ததா?
'நான் முதல்வர் பதவியை திருப்பிக் கொடுத்து விட்டேன்' என்றால், கொடுத்துதானே ஆக வேண்டும். மறுத்திருந்தால் பன்னீர்செல்வம் நிலை என்னவாகி இருக்கும்?
கடந்த 1973ல் அ.தி.மு.க., மாவட்ட அமைப்பாளர் சேலம் கண்ணன் வீட்டில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பூலாவரி சுகுமாறனும், அவரது தந்தை பழனியப்பனும் வீட்டிற்கு திரும்பும் போது, அவர்கள் வாகனத்தை வழிமறித்த எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகள், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த தியாகத்திற்காக, சுகுமாறனின் தங்கை விஜயலட்சுமியை சமூக நலத்துறை அமைச்சர் ஆக்கினார் எம்.ஜி.ஆர்., இது-போல் தியாக வரலாறு ஏதேனும் பன்னீர்செல்வத்துக்கு உண்டா?
கடந்த 2001ல் டான்சி நில வழக்கில் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், அப்போதைய நிதியமைச்சர் பொன்னையா.
அனுபவம் வாய்ந்த அவரையோ அல்லது கட்சிக்காக உயிர் தியாகம் செய்த குடும்பத்தை சேர்ந்த விஜயலட்சுமியையோ முதல்வராக நியமித்து இருக்க வேண்டும்.
அதைவிடுத்து, எம்.எல்.ஏ.,வாக சட்டசபைக்குள் புதிதாக நுழைந்த பன்னீர்செல்வத்திற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியுடன், ஜெயலலிதாவுக்கு பதில் முதல்வர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டது.
அதுமட்டுமா... பன்னீர்செல்வத்துக்கு நிர்வாகம் குறித்து சொல்லிக் கொடுக்க, மத்தியில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சங்கர், தமிழக தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.
பன்னீர்செல்வத்திற்கு இவ்வளவு வசதிகள் செய்து கொடுக்க ஒரே காரணம், அவர், 'மன்னார்குடி' வழிவந்தவர் என்பதால்!
அதனால்தான் அவருக்கு, 'விபரீத ராஜயோகம்' கிடைத்தது.
இதில், அனுபவம், தியாகம் என்று பன்னீர்செல்வத்திற்கு பிரத்யேக வரலாறு என்ன உள்ளது...
முதல்வர் பதவியை திருப்பிக் கொடுத்து விட்டேன் என்று சொல்வதற்கு!
ஓவராக போகும் ஓட்டு அரசியல்!
எஸ்.ஸ்ரீனிவாசன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இஸ்ரேல் - ஈரான் போர்
உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து அதற்கான எதிர்ப்பு
குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
'இஸ்ரேலை, இந்தியா கண்டிக்க
வேண்டும். உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த வேண்டும்.
இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதலே இப்போருக்கு காரணம்' என்று
கண்டித்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அதற்கு பின்பாட்டு பாடுவது போல், சில அரசியல் கட்சிகளும் இஸ்ரேலை கண்டித்து உள்ளன.
ஈரானை ஆதரிப்பதன் வாயிலாக, இங்குள்ள இஸ்லாமியர் ஓட்டுகளை பெறலாமே... அதற்கு தான் இந்த கண்டனம்!
தமிழகத்தில்
யூதர்களுக்கு ஓட்டு வங்கி இருந்திருந்தால் வாய் திறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், இங்கு இஸ்லாமியர் ஓட்டு வங்கி தானே பெரிதாக உள்ளது... குரல்
கொடுக்கா மல் இருக்க முடியுமா?
அதனால், பாகிஸ்தான், பங்களாதேஷ்,
பாலஸ்தீனம், ஈரான் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு ஒன்று என்றால், திராவிட
மாடல் அரசுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாசம் பொங்கி பெருக்கெடுத்து
விடும்.
இப்போருக்கு, பிள்ளை யார் சுழி போட்டதே ஈரான் தான்!
கடந்த 1979ல் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படும் வரை இஸ்ரேலும் - ஈரானும் நட்பு நாடுகளே!
வங்கதேசத்தைப்
போல், ஈரானிலும் அடிப்படை மதவாதிகளால் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம்
ஏற்பட்டது. அதன்பின், அவர்கள் சிந்தாந்தப்படி யூத நாடான இஸ்ரேல், எதிரி
நாடாக கருதப்பட்டது.
காரணம், எகிப்து, ஜோர்டான், சிரியா,
பாலஸ்தீனம், லெபனான் என சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள் இருக்க, நடுவில் ஒரு
யூத நாடு இருப்பதா என்ற அகங்காரம்!
விளைவு... லெபனானில் உள்ள
ெஹஸ்பொல்லா, ஏமனின் ஹவுதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போன்ற பயங்கரவாத
அமைப்புகளுக்கு நிதி உதவி செய்து, அவர்களை துாண்டிவிட்டு, இஸ்ரேல் மீது
பயங்கரவாத தாக்குதலை நடத்தி வந்தது, ஈரான்.
இந்நிலையில் தான்,
2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள், திடீரென்று இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்குதல்
நடத்தி, 1,200 பேரை கொன்று குவித்தனர். பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச்
சென்றனர்.
இதுதான், இன்றைய போருக்கான துவக்கம்!
இந்த வரலாறு தெரிந்தும், புரியாதது போல், இஸ்லாமியர்களின் ஓட்டுகாக ஈரானுக்கு கொடி பிடிக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை இஸ்ரேலும், ஈரானும் நட்பு நாடுகள்!
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள போதும், அந்நாட்டுடன் வர்த்த உறவு வைத்துள்ளது, நம் நாடு.
அத்துடன்,
அங்குள்ள சாபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை மேம்படுத்தவும், பொது
சரக்கு மற்றும் கொள்கலன் முனையத்தை இயக்கவும், நீண்ட கால அடிப்படையில்
ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதேநேரம், இஸ்ரேலுடன் தொழில்நுட்ப ஒப்பந்தங்களும் போட்டுள்ளது.
எனவே, இரு நாடுகள் உடனான நட்புறவு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நம் நாடு நடுநிலை வகிக்கிறது.
நம் வெளியுறவு கொள்கை புரியாமல், இதிலும் ஓட்டு அரசியல் செய்ய துடிப்பவர்களை என்ன சொல்வது?