தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ உதயநிதி பதில் கூறுவாரா?

 உதயநிதி பதில் கூறுவாரா?

 உதயநிதி பதில் கூறுவாரா?


PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.ராமசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சியை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் முதல்வர் விஜய் இருக்கிறார். அதனால் தான், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி கொண்டிருக்கின்றனர். கவர்னர் உரையின் போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்படும். ஆனால், இப்போது தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டு, மரபு மீறப்பட்டுள்ளது. த.வெ.க.,வும், பா.ஜ.,வும் ஏதோ ஓர் உடன்பாட்டிற்கு வந்திருப்பதையே இது காட்டுகிறது' என்று கூறியுள்ளார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.

தேசிய கீதத்தை இருமுறை பாடுவது மரபு அல்ல என்று கூறும் உதயநிதிக்கு சில கேள்விகள்...

* மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, தமிழ்த் தாய் வாழ்த்தை எந்த மரபின்படி, கருணாநிதி திருத்தி எழுதினார்?

* சங்க காலத்திலேயே தமிழர்களின் புது வருட பிறப்பாக சித்திரை முதல் நாளை கொண்டாடி வந்த நிலையில், தெலுங்கை தாய் மொழியாக கொண்ட கருணாநிதி எந்த மரபின்படி, தமிழ் புத்தாண்டை தை முதல் நாளாக அறிவித்தார்?

* அண்ணாதுரை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்த காலத்திலேயே, நெற்றி நிறைய திருநீருடன் தான் திருவள்ளுவர் புகைப்படங்களில் காட்சி அளித்தார். எந்த மரபின்படி தற்போது அவரது அடையாளம் அழிக்கப்பட்டு வருகிறது?

* மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக கோலோச்சியபோது, சட்டசபையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்திழுத்து ஆனந்தம் அடைந்தாரே... அது, சட்டசபையின் எந்த விதியின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்தது?

சபையில், இருமுறை தேசிய கீதம் பாடுவது, மரபு மீறல் என்று சபை நடவடிக்கைகளின் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது என்று உதயநிதி கூறுவாரா?

****

திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்து விட்டது!


வ.ப.நாராயணன், ஊரப் பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,' இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் விஜய் தலைமையிலான, த.வெ.க., அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகியுள்ளது. அதற்குள் எதிர்க்கட்சியினர் ஆளாளுக்கு விமர் சிக்கின்றனர்.

ஒரு சிலரை தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் அரசியலுக்கும், ஆட்சிக்கும் முற்றிலும் புதியவர்கள்; முதல்வர் விஜய் உட்பட எவருமே முன் அனுபவம் இல்லாதவர்கள்.

ஆனாலும், பதவியேற்ற நிமிடம் முதல் துரிதமாக செயலில் இறங்கியுள்ளனர்; துறை வாரியாக ஆய்வுகளை மேற்கொண்டு முந்தைய ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்களையும், முறைகேடுகளையும் வெளிக் கொணர்ந்து வருகின்றனர்.

புதியவர்களை பாராட்ட மனமில்லை என்றாலும், அவர்களை ஏளனம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

இதற்கு முன் தமிழகத்தை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.,க்களோ வெற்றி பெற்றதும், அவர்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்ததுண்டா? எந்த அமைச்சராவது துறை ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டதுண்டா?

கரை வேட்டி, வெள்ளை சட்டையுடன் மிடுக்காக காரில் ஏறி, எவரும் பார்த்து விடாதபடி காரின் கருப்புக் கண்ணாடியை ஏற்றி விட்டுச் சென்றவர்களைத் தானே பார்த்திருக் கிறோம்!

ஆனால் இவர்கள் அப்படியில்லையே... கடும் வெயிலிலும் தொகுதிக்கு சென்று மக்கள் குறைகளை கேட்கின்றனர்; குவாரிகளில் ஆய்வு செய்கின்றனர்; களத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அங்கேயே பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவும் பிறப்பிக்கின்றனர்.

ஆனாலும், 'தி.மு.க., வின் தயவில்தான் ஆட்சி நடக்கிறது; ஆறு மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும்' என்று சாபமிடுகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

கடந்த 2006 ல் வெறும், ௯௬ இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க., ௩௪ இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தயவோடு, ஐந்து ஆண்டுகள் மைனாரிட்டி அரசை அவருடைய தந்தை கருணாநிதி நடத்தியதை ஸ்டாலின் மறந்து விட்டார் போலும்!

திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. இந்த உண்மையைப் புரிந்து, புதியவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறுங்கள். அதுதான் ஆரோக்கிய அரசியலாக இருக்கும்; மக்களுக்கும் உங்கள் மீது நன்மதிப்பு ஏற்படும்!

****

பெண்கள் நிம்மதி அடைய..


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள, 717 மதுக்கடைகளை மூடியுள்ளது, தமிழக அரசு. இது , வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதேநேரம், 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதால் மட்டும் 'குடி'மகன்கள் அமைதியாக இருந்து விடப்போவதில்லை; இரண்டு அல்லது மூன்று கி.மீ., துாரத்தில் உள்ள மற்றொரு மதுக்கடைக்கு சென்று, தங்கள் குடலை நிரப்பிக் கொள்வர்.

போதையால் சிதறிப் போகும் மனம் சீராக சிந்திக்காது; இதனால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, 500 மதுக்கடைகளை மூடுகிறோம் என்றனர். ஆனால், புறவாசல் வழியாக, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில், மதுவிற்பனையை அதிகரித்தனர்; அதனால், குற்றச் சம்பவங்களும் அதிகரித்தன.

மது போதைக்கு ஆளானோர் கஞ்சாவை தேடுவதும், கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் மதுவை தேடுவதும் ஒரே அறைக்கு இரண்டு கதவுகள் என்ற கதையாகி விட்டது.

'டாஸ்மாக்' துறையில் ஆண்டுக்கு, 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், 100 கோடி ரூபாய் தனிநபர் கணக்கிற்கு சென்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

எனவே, த.வெ.க., அரசு, 717 டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பதை ஓர் ஆரம்பமாக கொண்டு, படிப்படியாக கடைகளை குறைத்து, மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். அப்போது தான் குற்ற சம்பவங்களும் குறையும்; பெண்களும் நிம்மதி அடைவர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us