PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாரில், 1948ல் பிறந்தவர் ராசு எனும் காளிதாசன். இவர், 1969ல் வெளியான, தாலாட்டு என்ற படத்தில், திருப்பத்துார் ராசு என்ற பெயரில் பாடல் எழுதினார். திருப்பத்துாரான் என்ற பெயரிலும் பாடல்கள் எழுதினார். காளிதாசன் என பெயரை மாற்றியதும், இவரது வாழ்வே மாறியது.
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், இவர் எழுதி, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய, 'கருணை உள்ளம்கொண்டவளே கருமாரியம்மா' என்ற பாடல் இன்றும் பிரபலம். தேவாவின் இசையில், வைகாசி பொறந்தாச்சுபடத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார்.தொடர்ந்து, அவரது இசையில், 75 படங்களுக்கு மேல் எழுதினார்.
இவர், 108 அம்மன்களையும் துதித்து எழுதிய, 'தாலி வரம் கேட்டு வந்தோம் தாயம்மா' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அருணாச்சலம், நட்புக்காக, சுந்தர புருஷன் உள்ளிட்ட படங்களின் பாடல்களும் பிரபலமாகின. தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற இவர், தன் 68வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

