PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

ஜூன் 27, 1899
-இலங்கையின், யாழ்ப்பாணம் மாவட்டம், மட்டுவில் கிராமத்தில், சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியின் மகனாக, 1899ல் இதே நாளில் பிறந்தவர் கணபதி பிள்ளை.
இவர், மட்டுவில் சந்திரமவுலீச பாடசாலையில் படித்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், பொன்னம்பல புலவர், பொன்னப்பா பிள்ளை, வித்துவான் சுப்பையா பிள்ளை உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார்.
மதுரை தமிழ் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்று, மட்டுவில் சந்திரமவுலீச பாடசாலையில் காவிய ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியதுடன், சொற்பொழிவுகளையும் ஆற்றினார்.
இலக்கிய தொண்டுக்காக, இலங்கை பல்கலையில், 'கலாநிதி' பட்டம் பெற்றார். இவரது 'சைவ நற்சிந்தனைகள், பாரத நவமணிகள், கம்பராமாயண காட்சிகள், செந்தமிழ் களஞ்சியம்' உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 23 நுால்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவர் தன் 86வது வயதில், 1986 மார்ச் 13ல் மறைந்தார்.
மட்டுவில் மணிமண்டபம் மற்றும் சிலையாக வாழும் தமிழறிஞர் பிறந்த தினம் இன்று!