PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன், மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியது போல், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் நான்காண்டுகளில் பெண்களுக்கு எதிராக, 18,000 குற்றங்கள் நடந்து உள்ளன. நடப்பாண்டில் இதுவரை, 878 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன.
'தமிழகத்தில் இதுவரை, 7,000 படுகொலைகள் நடந்துள்ளன; 15,280 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தும், குற்றங்கள் குறையவில்லை. நான்கு ஆண்டுகளில், 1 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...' என, கையில் எந்த குறிப்பும் இல்லாமல், புள்ளி விபரங்களை அடுக்கி கொண்டே போனார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ரமணா பட விஜயகாந்த் மாதிரி, புள்ளி விபரங்களா அடுக்கி விளாசுறாரே... ராத்திரி முழுக்க உட்கார்ந்து மனப்பாடம் பண்ணியிருப்பாரோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.