PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

திண்டுக்கல்லில் புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்தவரும், கூட்டுறவு துறை அமைச்சருமான பெரியசாமி கொடியசைத்து, பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
விழாவில் பெரியசாமி பேசும்போது, 'இந்த பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்' என்றார். உடனே சுதாரித்துக் கொண்டவர், 'அவ்வாறு எல்லாம் நாம் சொல்லக்கூடாது. வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்' என்றபடியே, 'பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம்' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இப்படி தான் பெண்களை பார்த்து, 'ஓசி பயணம்'னு கிண்டல் பண்ணிய பொன்முடி, இப்ப வீட்டுக்கு போயிட்டாரு... அதை, நம்ம அமைச்சர் ஒரு நிமிஷம் நினைச்சு பார்த்திருப்பார்... அதான், சட்டுன்னு திருத்திக்கிட்டாரு...' என்றார்.
சக நிருபரோ, 'திருத்திக்கலன்னா, வருந்த வேண்டிய சூழல் வந்துடும்ல்ல...' என்றபடியே கிளம்பினார்.