PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

சென்னை, திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க., செயலர் தனியரசு தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், சிறப்பு பேச்சாளராக, கட்சியின் கொள்கை பரப்பு செயலரான சபாபதி மோகன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், 'முதல்வரின் காலை உணவு திட்டத்தால், 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். எங்கள் வீட்டின் பணிப்பெண்ணுடைய குழந்தையை கேட்டால், 'எங்கள் பெரியப்பா எங்களுக்கு காலை உணவாக இட்லி, கிச்சடி தருகிறார்' எனக் கூறுகிறது...' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'முதல்வர், தன்னை மாணவ - மாணவியர் எல்லாம் அப்பான்னு கூப்பிடுறதா சொல்றாரு... இவரு பெரியப்பான்னு சொல்றாரே...' எனக்கூற, சக நிருபர், 'சபாபதி முன்னாள் பேராசிரியர் அல்லவா... அதனால, புரமோஷன் போட்டுட்டாரு...' எனக்கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.